Tuesday, 31 March 2015



       



மாவீரன் விசுவநாததாஸ்




         இந்தியச் சுதந்திரம் என்பது, பல்லாயிரம் பேர் சிறைப்பட்டும், ரத்தம் சிந்தியும், வாழ்வை இழந்தும், குடும்பங்களைத் தொலைத்தும், உயிரை ஈந்தும் செய்த தியாகங்களின் பயனாயும், பலனாயும் கிடைத்தது என்பதை இளைய தலைமுறைகளுக்கு, முக்கியமாகப் பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மூத்த தலைமுறைகளுக்கும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது, வேதனையோடு,,,,,,,,,,,,

         அக்காலங்களில் (1895-1935) மிக முக்கிய நாடகப் பெரும் கலைஞராக விளங்குகிறார் தாஸ். நல்ல கலைஞர்கள், பெரும்பாலும் மக்கள் நலம் சார்ந்த விடுதலை அரசியல் சார்ந்த கலைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். 1919-முதல் காந்தியின் பிரவேசத்துக்குப் பிறகு, காங்கிரஸ் விடுதலைப் பேரியக்கம், மக்கள் தழுவிய இயக்கமாக மாறுகிறது. இயல்பாகவே மனிதநேயம் மிக்க தாஸும், சுதந்திர தாகம் கொண்ட கலைஞராக மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தார். 1925-ம் ஆண்டு தூத்துக்குடிக்கு வருகை தந்த காந்தியாரைச் சந்தித்து அவர் முன் பாடும் வாய்ப்பைப் பெறுகிறார். அன்று நடக்க வேண்டிய நாடகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, காந்தியார் முன் பாடினார் தாஸ். பக்க வாத்தியக்காரரோடு மேடை ஏறிய தாஸ், தேசியப் பாடல்களைப் பாடினார்.
 
             பின்னர் காந்தியாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். அப்போது காந்தியோ பரம ஏழை, சந்நியாசிஎன்ற பாடலை தாஸ் பாடியதைக் கேட்டு, தன் பெயர் வந்த காரணம் பற்றிப் பக்கத்தில் உள்ள சுத்தானந்த பாரதியிடம் விளக்கம் கேட்கிறார். பாரதி, நீங்கள் ஏழையாம், சந்நியாசியாம் என்று மொழிபெயர்த்துச் சொல்கிறார். மொழி தெரியாவிடினும் இசையால் கவர்ந்திழுக்கப்பட்ட காந்தியார், தாஸை காங்கிரஸ் பேரியக்கத்திற்கு அழைக்கிறார். காங்கிரஸ் ஏழைகளின் இயக்கம். இதில் பணியாற்றுகின்றவர்களும் எளிய தோற்றம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்என்று தன் கோரிக்கையையும் வெளியிடுகிறார். இது தனக்கே விடப்பட்ட அழைப்பு மற்றும் யோசனை என்பதை தாஸ் உணர்கிறார்.

          தன் ஆடம்பர பட்டுடைகள், காதில் கழுத்தில், இடுப்பில் விரல்களில் அணிந்திருந்த தங்க நகைகளை விட்டு வெளியேறுகிறார். முரட்டுக் கதரைத் தன் ஆடையாக ஏற்கிறார். நூறு சதவிகிதம் தன்னை விடுதலை வீரனாக, சுத்த காங்கிரஸ்காரனாக, பின்னர் பதவிக்குப் பறக்காத போராளியாக மாற்றி அமைத்துக் கொள்கிறார். சாகும் வரைக்கும் தேசிய, விடுதலைப் போர்க் குணத்தை இழக்காத மாமனிதராகவே வாழ்கிறார்.

        1937-ம் ஆண்டு ஆர்.வி.ஆலையில் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் மேற்கொள்கிறார்கள். வெள்ளை நிர்வாகம், கருங்காலிகளை வைத்து வேலை நிறுத்தத்தை முறியடிக்க முயன்று கொண்டிருந்தது. தாஸ், மதுரை வைத்தியநாத ஐயர், மட்டப்பாறை வெங்கட்ராமையர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலான காங்கிரஸ் தலைவர்களுடன் சென்னை வந்து, முதலமைச்சர் ராஜாஜியைச் சந்தித்து, ஆலையைத் திறக்க தடைகோரினார். அவ்வாறே தடைவிதிக்கப்பட்டது. ஆர்.வி.பட்டியில் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதியை செய்து கொடுக்க ஆலை நிர்வாகம் பணிந்து ஒப்புக் கொண்டது.
    பொதுவுடமைக் கட்சியால் நடத்தப்பட்ட பத்திரிகையான ஜனசக்தி’, கடும் பொருளாதாரச் சிக்கலில் இருந்தபோது, திண்டுக்கல்லில் 19.6.1938 அன்று நாடகம் நடத்தி, ‘ஜனசக்திக்கு ரூபாய் நூறை அன்பளிப்புச் செய்தார் விசுவநாததாஸ். அவருடன் இலவசமாக நடித்துக் கொடுத்தவர், பின்னாளில் பொதுவுடமை இயக்கத் தலைவராக மிளிர்ந்த கே.பி.ஜானகி அம்மாள். தலைவர் ஜீவா, ஜனசக்தியில் இதைக் குறிப்பிட்டுத் தாஸைப் பாராட்டி இருக்கிறார். தேச பக்த நடிகர்என்று, தாஸை அழைக்கவும் செய்தார் ஜீவா. தாஸ் அளித்த அன்றைய நூறு ரூபாய், இன்று ஒரு லட்ச ரூபாய்க்குச் சமம்.
        விசுவநாததாஸின் அரசியல் தீவிரம், அவருடைய சொந்த வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. முருகனாக வந்தாலும், அரிச்சந்திரனாக வந்தாலும், தாஸ் சுதந்திரப் போராட்டப் பாடல்களைப் பாடிச் சுதந்திர உணர்ச்சியூட்டுவதை ஒரு கடமையாகவே செய்து கொண்டிருந்தார். வெள்ளை நிர்வாகக் காவல்துறை அவரைக் கைது செய்யக் காத்துக் கொண்டிருக்கும், அவர் மேடைக்கு வந்ததுமே மக்கள், ‘வெள்ளை கொக்கு பாடுங்க என்பார்கள். பாடிய உடனே தான் கைது செய்யப்படுவோம் என்பதை தாஸ் அறிவார் என்றாலும் பாடுவார். உடனே கைது செய்யப்படுவார். இது போன்ற சம்பவங்கள் ஏராளம்,ஏராளம்,,,,,,,,,,

    சிறைக்குப் போவார். ஒரு நாள் நாடகம். ஆறு மாதம் அல்லது ஓராண்டு சிறை. இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்த தாஸ், தன் குடும்பச் சொத்தும் அழிந்தும், குடும்பம் வறுமைப்பட்டுக் கடன்காரராக தாஸ் மாறிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. என்றாலும், இலட்சியம் தேசத்தையே முன்நிறுத்தியது. அக்காலத்திய தலைவர்கள் மேற்கொண்ட சுதந்திரப் பிரசாரத்துக்குச் சற்றும் குறையாத அளவுக்கு தாஸும், சுதந்திரக் தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மக்களிடையே,

    இரண்டாம் உலக யுத்தத்தை ஹிட்லர் தொடங்கி வைத்தான். பிரிட்டன் யுத்தத்தில் குதித்தது. பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களை கலந்து கொள்ளாமலேயே இந்தியாவை யுத்தத்தில் ஈடுபடச் செய்த ஜனநாயக மீறல் போக்கை விமர்சித்த காங்கிரஸ் பேரியக்கம், யுத்த நடவடிக்கையில் இந்தியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற முடிவை எடுத்தது. சென்னை ஆளுநர் எர்ஸ்கின், தாஸோடு தொடர்பு கொண்டார். யுத்தத்தை ஆதரித்து மேடையில் பாடினால், தாஸுக்கு ஆயுள் முழுவதும் ஆயிரம் ரூபாய் அரசு தரும் என்று பேரம் பேசினார். இது லட்சியத்துக்கும் மானத்துக்கும் இடப்பட்ட சவால் என்பதை உணர முடியாதவரா தாஸ்? கவர்னர் எர்ஸ்கினின் வேண்டுகோளைப் புறக்கணித்தார்

      அன்றைய மேயர் வாசுதேவ், விசுவநாத தாஸைப் பார்க்க வந்தார். கடன் சுமையால் தாஸின் வீடு ஏலத்துக்கு வர இருந்தது. எல்லாவற்றையும் இழந்த தாஸின் கடைசிச் சொத்து அந்தப் பரம்பரை வீடு ஒன்றுதான். தாஸின் குடும்பம் அங்கேதான் வாழ்ந்தது. இதைத் தெரிந்து கொண்ட மேயர் வாசுதேவ், தாஸைச் சந்தித்தார். பணம் தருவதாகவும், வீட்டையும் மீட்டுத் தருவதாகவும், இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மீட்டுத் தருவதாகவும், அதற்குரிய பிரதிபலனாக, தாஸ் காங்கிரஸ் பேரியக்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். என்னால் புல்லைத் தின்ன முடியாதுஎன்றார் தாஸ்.

11 comments:

  1. மாவீரன் விசுவநாததாஸ் அவர்களின் தொண்டு போற்றுதலுக்குறியது
    மேயருக்கான பதில் படித்து புல்லரித்து விட்டது அருமை இப்படியெல்லாம் எல்லோராலும் பதில் கூறிவிடமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. என்னப்பா பன்றது? தங்கள் அன்பின் முதல் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  2. அடுத்தடுத்த பதிவுகளில் அரிய தகவல்கள்..

    இப்பேர்ப்பட்டவர்களை எல்லாம் மறப்பது தான் தமிழரின் குணமோ!..

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தரும் ஊக்கம் தான், தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  3. //...நூறு சதவிகிதம் தன்னை விடுதலை வீரனாக, சுத்த காங்கிரஸ் காரனாக, பின்னர் பதவிக்குப் பறக்காத போராளியாக மாற்றி அமைத்துக் கொள்கிறார்...//

    ஆனால் - இன்றைக்கு?....

    பதவிக்கும் பணத்திற்கும் - பறக்கின்ற நோயாளியாக ஆனார்கள்!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் மீள் வருகைக்கு நன்றிகள் பல, இன்றைய நிலை வேதனையான நிலை,,,,,,,,,,,,

      Delete
  4. அன்றைய நூறு ரூபாய், இன்று ஒரு லட்ச ரூபாய்க்குச் சமம்.....உண்மைதான்...

    ReplyDelete
    Replies
    1. அத்தகைய அருங்குணம் கொண்டவர் பின்னாளில் பட்ட வேதனை நாளை,,,,,,,,,,,,
      தங்கள் வருகைக்கு நன்றிகள் பர.

      Delete
  5. சிறப்பான நிகழ்வுகள்... அறிய வைத்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  6. சிறு கோரிக்கை : கண்களை உறுத்தாவண்ணம் புற வண்ணம் (background color) இருந்தால் நல்லது...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. இனி சரியாக செய்கிறேன்.

      Delete