பெண்களின் நட்பு
நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழி ஒருவரைச்
சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பெண்களின் சந்திப்பு என்பது ஏதோ ஒரு திருமணம்,
காதுகுத்து, விழாக்கள் இப்படித்தானே, (நகைக் கடை, புடவைக்கடை என்று சொல்லாதீர்கள்)
நானும் ஒரு திருமணத்தில் தான் அவளைச் சந்தித்தேன். நீண்ட நாட்கள், நாட்கள் கூட
அல்ல மாதங்கள்,,,,,, அல்ல அல்ல வருடங்கள், ஆம் 10 ஆண்டுகள் இருக்கலாம்,,,,, என்னை
அடையாளம் கண்டு என்னருகில் வந்து நலமா? என்றாள்,,,, ம்ம் என்றேன் சிரிப்புடன்.
எனக்கு ஒரு பழக்கம் உண்டுங்க. மறந்து இருந்தாலும் அப்படியே நினைவில் இருப்பது போல்
பேசிச்சமாளித்து விடுவேன். யார் என்று சொல் பார்க்கலாம் என்றாள் விடாப்பிடியாக,,,
நானும் என்னப்பா இது உன்னை மறப்பேனா?????? என்றேன். வேற என்ன சொல்ல முடியும், ஆனால்,
அவள்,
ஆமா உன்னைத் தெரியாதா?
நகமும் சதையும் போல்,,,,,,,
ஈர் உடல் ஓர் உயிர் போல்,,,,,,,,
இன்னும் என்னெல்லாமோ
சொல்லிக்கொண்டே போனாள்,,
எனக்கு விளங்கிவிட்டது இவள் எங்கு
வருகிறாள் என்று,,,
இவள் யார் என்பதில் இருந்து தப்பித்த மகிழ்ச்சி மறைந்து, அவள்
முகத்தைப் பார்க்கும் தைரியம் அற்றுத் தலைகவிழ்ந்து அமர்ந்தேன். சிறிது நேர
அமைதிக்குப் பின் நானே தொடர்ந்தேன். உன்னவர் என்ன செய்கிறார், குழந்தைகள் எத்தனை?
என்ன படிக்கிறார்கள் என்று கேட்டுப் பதில் பெற்றேன். அவளும் என்னை விசாரித்தாள்.
ஆனாலும் அவளின் பார்வை என் மனதைப் படித்தவாறு இருந்தது. உன்னால் எப்படி இப்படி
இருக்க முடிகிறது. நீயா இது, எனக்கு ஆச்சிரியமா இருக்கு, உங்களைப் பார்த்து,,,,,,
என்று பேசிக்கொண்டே போனாள்,,,,,,,
சரி சரி உன் கோபத்தை விட்டு
விட்டு அவளிடம் பேசப் பாரு,, எப்படி இருந்தவர்கள் நீங்கள்,,
கல்லூரி காலத்தில் நம் வகுப்புப் பேராசிரியர்களே உங்களின் நட்பினைச் சிலாகித்தது மறந்து போனதா? என்று பழய
சம்பவங்களைப் பேசியபடியே போனாள்,
என்ன தான் பிரச்சனை????
ஏன் இருவரும் பேசாமல்
இருக்கிறீர்கள் என்று திரும்பத் திரும்ப கேட்டாள், பதில் பேசாமல் அவளையேப்
பார்த்துக்கொண்டு இருந்தேன்.
ஆம் எங்களுக்குள் என்ன பிரச்சினை,,, எதுவும் இல்லையே,
பிறகு ஏன் தொடர்பில்லாமல், அதற்குள் அவளின் கணவர் வந்துவிட, அவரிடம் என்னை
அறிமுகப்படுத்திய பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் பழங்கதைகளை,,, சரி நாங்கள் கிளம்பனும் வருகிறோம்
என்று அவர்கள் கிளம்பிவிட்டார்கள்,,,
என் மனதை எழுப்பி விட்டு விட்டு. நான்
இருக்கும் இடம் மறந்து போனது, பக்கத்தில் இருப்பவர்கள் மறந்து மறைந்துப்
போனார்கள், என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஆம் அவள் சொல்வது உண்மைதானே,
எப்படியெல்லாம் இருந்தோம். நீங்கள் ஒருவரையே இருவரும் திருமணம் செய்துகொள்வீர்களா?
என்று உறவுகளே கிண்டல் பேசும் அளவிற்கு அல்லவா இருந்தோம். இன்று,,,,
எத்தனை
ஆண்டுகள் நட்பு. மனம் பலவாறு அவளை நினைத்து அசைப்போட்டது.
பெண்களின் நட்பு என்பது திருமணம்
வரைதானே,,
அவளை நான் முதன் முதலில் சந்தித்தது ஒரு
பேச்சுப் போட்டியில் தான். என் துறைச் சார்ந்தவள் அல்ல, ஆனால் தமிழ்ப் பேச்சு
போட்டி. யாரோ மகி யாமே அவர்கள் பேச்சு போட்டியில் கலந்துக்கொண்டால், அவர்கள் தான்
முதல் பரிசாமே என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். பக்கத்தில்
இருப்பவர்களிடம் நான் தான் என்று சொல்ல வேண்டாம் என்று சைகையில் சொல்லிவிட்டு
அவர்களையேப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர்கள் இன்னும் வரவில்லை என்று சொல்லி
சமாளித்து, என் துறைமாணவிகளும் அவர்களுடன் சேர்ந்துப் பேசிக்கொண்டு இருந்தோம்.
போட்டி ஆரம்பித்தது. அவர் முறை வந்தது,,, சரி என்ன தான் இவர் பேசப் போகிறார் என்று
மிக ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தேன்,,
இந்த பேச்சு தான் என்னை அவருடன் நட்பு பாராட்ட
வைத்தது. இயற்கை வருணனை, சங்க இலக்கியப் பாடல், ஆஹா என்ன ஒர் அழகான விளக்கம்,
அருமையான சொற்பிரயோகம், அழகிய அபிநயம், சங்க இலக்கியப் அப்பாடல் எனக்கு அன்று தான்
தெரிவது போல் இருந்தது. ஒத்த ரசனையுடையவர்களைப் பார்க்கும் போது மனம் அவர்கள் பால்
செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பது மெய்தானே,,, அப்படித்தான் இருந்தது என நிலை, கைத்தட்டல்
ஓசை கேட்டுச் சுயநினைவு பெற்றேன். என் முறைவந்தது எனக்குப் பேச ஆர்வம் இல்லை. பேசவும்
கூடாது என்று முடிவெடுத்தேன். கடைசிவரை நான் பேசவேயில்லை. போட்டி முடிந்து
வெற்றியாளர்களை அறிவித்தார்கள்.
தோழிகள் உனக்குத் தான் முதல்பரிசு என்று சொல்லிக்
கொண்டிருந்தார்கள்.அவர் தமக்கு இரண்டாம் மூன்றாம் இடமாவது கிடைக்கும். இல்ல
அதுவும் இல்லாமலும் போகலாம் என்று தன் தோழியர்களிடம் பேசிக்கொள்வதும்,,,,,,
இடையிடையே என்னைக் கேட்பதும் என் செவிகளில் விழந்தபடி இருந்தது.
போட்டி முடிவுகள்
அறிவிக்கப்பட்டது. மூன்றாம் இடம் அவர் பெயர் இல்லை, இரண்டாம் இடம் அவர் பெயர்
இல்லை, முதல் இடம், பெயர் அறிவித்தார்கள், அவர் பெயர் தான் மகிழ்ச்சியில் இருக்கும்
இடம் மறந்து கைத்தட்டினேன். அனைவரின் கைத்தட்டலும் நின்றபின்னும் என் கைத்தட்டல்
தொடர்ந்ததால் எழுந்த சத்தத்தில் மகேசுவரி ஏன் நீ பேசல என்று பேராசிரியர்
அழைக்கவும், நான் பதறிப்போனேன். அய்யையோ, நாம் இருப்பது அவருக்கு தெரிந்து போச்சே என்று நினைத்து அவரைப் பார்க்க, அவரும் என்னைப் பார்க்க,,,, எது அந்த சங்க
இலக்கியப் பாடல், எங்களை நட்பாக்க வைத்தப்பாடல், உறவுகளுக்குள் உறவாட வைத்தப் பாடல்,
வசந்தகால வாழ்க்கையாக்கியப் பாடல் நாளைச் சொல்கிறேன்.