Tuesday, 30 September 2025

 

வாழ்த்துகள்

           நம் மக்கள் மேன்மை அடையும் போது நாம் அடையும்  மகிழ்ச்சி எல்லையற்றது. ஆம் மாணவர்கள் சாதிக்கும் போது அவர்களைக் காட்டிலும் நாம் ஆசிரியர்கள் மகிழ்வது இயல்பு தானே. பொருந்தொற்றிற்கு பிறகு கல்வியின் நிலை மனம் ஏற்புடையதாக இல்லை. அந்த நிலையில் சில மாணவர்கள் தம் நிலை உணர்ந்து செயல்படும் போது சாதிக்கிறார்கள்.

             எங்கள் கல்லூரியின் மாணவி மா. சக்திப்பிரியா பத்திரிக்கைத் துறையில் தன் பயணத்தைத் தொடர முயன்று, பல நேர்காணல் எதிர்நோக்கி வெற்றிபெற்றார். இன்று விகடன் மாணவ பத்திரிக்கையாளர். அவரின் முதல் கட்டுரை இல்லை தகவல் தொகுப்பு சக்திவிகடனில் வெளிவந்துள்ளது. வாழ்த்துகள் சக்தி

         இந்த வெற்றியை கல்லூரி செயலர் திரு இரா.சுந்தரவதனம் கல்லூரி முதல்வர் முனவர் இரா.இராசாமணி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி.கண்மணி  துறைப்பேராசிரியர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.

கூடுதல் சிறப்பு விகடன் குழுமத்தின் முதன்மைச் செய்திளார் தஞ்சைப்பகுதி ஆசிரியர் குணசீலன் அவர்கள் வந்து வாழ்த்தியது. நன்றி குணசீலன் ஐயா,,,








Tuesday, 23 September 2025

 

                                                     சமூகவிடுதலை

           தமிழின் தொன்மை அறிந்தோர் மனதில், கரந்தைத் தமிழ்ச் சங்சம் என்றும் நிலைத்து நிற்கும் ஒரு கடல். ஆம் மொழியின் மேன்மைக்காய் தொடர்ந்து பாடுபடும் சங்கம் இது. இதன் கல்வி நிறுவனம் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியாக நிற்கும், கரந்தைப் புலவர் கல்லூரி. இக்கல்லூரி தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளை உருவாக்கியது. காலச்சூழலுக்கு ஏற்றவாறு கலைக்கல்லூரியாக தமிழ்ப் பணியாற்றி வருகின்றது. இற்றை நாளில் தமிழ்த்துறையின் தமிழ் உயராய்வுமையம் மாணவர்களுக்காய் ஊடகவியல் பயிற்சி பட்டறை 15 நாள்கள் நடத்தியது. 26 ஆளுமைகள் 28 அமர்வுகளில் அச்சு ஊடகம் முதல் காட்சி ஊடகம் வரை அனைத்தையும் மாணவர்களுக்கு விளக்கினார்கள். இப்பயிற்சியின் நிறைவாய் பயிற்சியாளர்களுக்கு சான்றிழ் வழங்கும் நிகழ்வு இன்று (23.09.2025) நடைபெற்றது. 

                  சிறப்பு விருந்தினராய் ஊடகத்துறையின் முத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் அவர்கள் வருகைப் புரிந்தார்கள். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு குறித்து முதல் நாளே தன் முகநுல் பக்கத்தில் எழுதியிருந்தார். தம் உரையில் அச்சு ஊடகம் முதல் இன்றைய காட்சி ஊடகம் வரை அனைத்தையும் மாணவர்களுக்கு கூறினார். பாரதியின் பத்திரிக்கைப் பண்பினையும் புகழ்ந்தார். கரும்பு தொழிலாளர்களின் துன்பத்தினை வடித்த கவிதையைக் குறிப்பிட்டார். திரு,வி.க, ஜிவா, பெரியார், அண்ணா, கலைஞர் என அனைவரின் ஊடகப் பணியினை மாணவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் விளக்கினார். சமூகவிடுதலைக்கான அடிப்படையாக அமைந்த இதழ்களை சுட்டிச்சென்றார். மிகச் சிறப்பானதொரு உரையாக அமைந்தது. எதிர்கால ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள் கூறி தம் உரையை நிறைவுசெய்தார். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். வணக்கமும் நன்றியும் தோழர்.






Monday, 22 September 2025

    அனைவருக்கும் வணக்கம் 

      இணையத்தில் இயங்குதல் என்பது இன்று  இயலாமல் போனது. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆனாலும் மீண்டும் இயங்கும் சூழலில் இணையத்திற்குள் நான். ஒரு கட்டத்தில் வலைப்பூவில் எழுதுதல் என்பது மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருந்தது.  பின்னொரு சமயத்தில் இவை அனைத்தும் மாறிப்போனது. முழு முதற் காரணம் வேறு இல்லை.சோம்பல் தான். இன்று மீண்டும் எழுதுதல் என்பது என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கக் கூடிய,  என் அடிப்படையான இயக்க வாதிகளுக்காக. ஆம் என் அருமை மாணவர்களுக்காக  மீண்டும் வலைப்பூவில் தொடர் ஓட்டத்தை எடுத்திருக்கின்றேன். 

                        வேகமான ஓட்டம் அல்ல.  மிதமான ஓட்டமே. என் மாணவர்களும் என்னோடு. என்னை முந்தக்கூடிய அவர்களின் பின்னே நான். எதைப் படித்தாலும் எதைப் பார்த்தாலும் உடனடியாக எழுதிட வேண்டும் என்று மனம் சொல்லும். ஆனாலும் ஏனோ எழுதிட துணிவதில்லை. பதிவு செய்து வைத்திட எத்தனையோ நினைவுகள் நிகழ்வுகள். முடிந்தவை முடிந்தவையாகவே இருக்கட்டும். இனிமேலும் தொடர்ந்து எழுதுவோம் என்ற நம்பிக்கையில் எழுதிட முனைந்துள்ளேன். வாசித்து வாழ்த்துதலான பின்னூட்டத்தை முன் போலவே எனக்கு அளித்திட வேண்டுகிறேன்.