Friday, 31 July 2015

அர்த்தமற்ற ஆராய்ச்சி,,,,




அர்த்தமற்ற ஆராய்ச்சி,,,,


                                                 பூக்கள் க்கான பட முடிவு
                                                                                                                

                                                     படம் கூகுல்


அர்த்தமற்ற வார்த்தைகள்

அர்த்தமுள்ளவர்கள் சொல்லும் போது

அவை

அர்த்தமானவை என மனம் நினைக்கும்,

அர்த்தமுள்ள வார்த்தைகள்

அர்த்தமற்றவர் சொல்லும் போது

அர்த்தமற்றவை என மனம் நினைக்கும்,

அர்த்தம் என்பது இங்கு ,,,,,,,,,,,,,

அர்த்தமுள்ளவர்கள் அர்த்தமாய் சொல்லும்

அர்த்தம் உள்ளதை அர்த்தப்படுத்திக்கொள்ள

நாமும் அர்த்தமுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும்,

சரி 

யார் அர்த்தமுள்ளவர்கள்,

எது அர்த்தமுள்ள வார்த்தை,

யார் அர்த்தமற்றவர்கள்,

எவை அர்த்தமற்ற வார்த்தைகள்,

என்ன?

அதிகமாக அர்த்தப்படுத்த வேண்டாம்,

Tuesday, 21 July 2015

உடல் விட்டு உயிர் போகும்,,,,,,,,,,,,,,,



உடல் விட்டு உயிர் போகும்,,,,,,,,,,,,,,,
sad girl க்கான பட முடிவு

       உடல் மட்டும் தான், உயிர் போகும் உன் நினைவால்,

   அன்பானவர்களின் பேச்சு நின்றால் வெறும் உடல் தான்,,,, உயிர் இல்லை தானே,,,,,,,,,,

என்னது இது பேச்சு மூச்சு என்று பினாத்தல்,

ஆஹா எனக்கு இந்த காதல் வார்த்தைகள் எல்லாம் இப்ப சரியா வரல போல் இருக்கு,

அது ஒன்றும் இல்லை, மைடியர்,

ச்சே,,, மையீற்றுப் புணர்ச்சி சொல்ல வந்தேன்,  அதான் இந்த உளரல், 

அது சரி, 

அதில் உளராமல் சொன்னால் சரி,

        ஈறு போதல் இடை உகரம் இ ஆதல்

       ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்

       தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல்

       இன மிகல் இனைய உம்பண்பின் கு இயல்பு ஏ


                  1.ஈறுபோதல்


                  2.இடை உ கரம் இ கரம் ஆதல்


                  3.ஆதி நீடல்


                  4.அடி அ கரம் ஐ ஆதல்


                  5.தன் ஒற்று இரட்டல்


                  6.முன் நின்ற மெய் திரிதல்


                  7.இனமிகல்

  இதாங்க இந்த பாட்டில் இருப்பது,

சரி இனைய என்று ஒன்று இருக்கிறதே என்கிறீர்களா?

அதனைப் பின் சொல்கிறேன்,

  இரண்டு விதி இருக்குங்க,

1. உயிர் வரின் உக்குரல் மெய்விட்டு ஓடும்


   நிலைமொழியில் உயிர்மெய் (உகரம்) வந்து, வருமொழியில் உயிர் வந்தால் உகரம் மெய்யை மட்டும் விட்டு ஓடிவிடும்.
 இதைப்பாருங்கள்,
      வண்டினம்
      வண்டு+இனம்
      டு வில் உள்ள ட்+உ இதில் உகரம் போய்,
      வண்ட்+இனம்
என ஆகும்.
பின்

2. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே

    நிலைமொழியில் மெய் இருந்தால், வருமொழியில் உள்ள உயிர் வந்து அதனுள் தங்கும்.
வண்ட்+இனம்
வண்டினம்
எனவாயிற்று,

சரி இப்போ மையீற்றுப்பண்புப் பெயர் புணர்ச்சி பார்ப்போம்,

அதன் நன்னூல் விதி,

           செம்மை சிறுமை சேய்மை தீமை
           வெம்மை துமை மென்மை மேன்மை
           திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர்
           இன்ன உம் பண்பு இன் பகா நிலை பதம் ஏ

 1.ஈறுபோதல்

    ஈற்று எழுத்து போதல், அதாவது இரு சொற்களாக பகுக்கும் போது, நிலைமொழியின் இறுதி எழுத்து போதல்,
                    முதுமரம்

                   முதுமை+மரம்
ஈறுபோதல் எனும் விதிப்படி மை விகுதி போனது,
                    முது+மரம்
முதுமரம் என புணர்ந்தது.
2.இடை உ கரம் இ கரம் ஆதல்
                     கரியன்
                    கருமை+ அன்
 இதில்
ஈறுபோதல் படி மை விகுதி போகும்,
                      கரு+அன்
என்றாகி,,,,
(நாம் நிலைமொழியில் உயிர்மெய் எழுத்து உள்ளது, வருமொழியில் உயிர் உள்ளது, எனவே, உயிர் வரின் உக்குரல் மெய்விட்டு ஓடும் என்றும்,
பின்னது, உடல் மேல் உயிர் வந்து ஒன்றும் என்றால், கரு+அன்= கர்+அன்= கரன் என்று தான் வரும்.)

 எனவே அவ்விதி விடுத்து, இடையில் உள்ள உ கரம் இ கரமாதல்,,,, 

எனும் விதிக்கொண்டு,
இடை உ கரம் இ ஆதல் எனும் விதிப்படி 
                 கரு+அன் (ரு=ர்+உ, ரி=ர்+இ)
                         கரியன் 

எனப்புணர்ந்தது.
.3.ஆதி நீடல்
ஆதிநீடல்- ஆதி எழுத்து,முதல் எழுத்த நீண்டு வருதல்,

                           மூதூர்
                      முதுமை + ஊர்
ஈறுபோதல் படி மை போகும்,
                          முது + ஊர்

என்றும்,
உயிர் வரின் உக்குரல் மெய்விட்டு ஓடும் எனும் விதிப்படி
                            முத் + ஊர்
என்று,
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் எனும் விதிப்படி
                               முதூர்
என்று,
ஆதி நீடல் எனும் விதிப்படி
முதல் எழுத்து மு-மூ என,
                                 மூதூர் 

என புணர்ந்தது.
4.அடி அ கரம் ஐ ஆதல்

முதல் எழுத்து அதாவது அடி எழுத்து அ கரம் ஐ ஆகுதல் 
                        பைங்கொடி
                       பசுமை + கொடி
ஈறுபோதல் எனும் விதிப்படி மை போகும்,
                       பசு + கொடி
                       சு கெட்டு
                       ப + கொடி
என்றாகி,

இனமிகல் எனும் விதிப்படி ங் தோன்றி

                        பங் + கொடி
என்றாகி,
அடி அ கரம் ஐ ஆதல் எனும் விதிப்படி ப (ப்+அ = ப்+ஐ=பை)

                         பைங்கொடி
எனப் புணர்ந்தது.


 5.தன் ஒற்று இரட்டல்
தன் ஒற்று எழுத்தே இரண்டுமுறை வருதல்,
                       வெற்றிலை
                       வெறுமை+இலை
ஈறுபோதல் எனும் விதிப்படி மை போகும்,
                        வெறு + இலை
உயிர் வரின் உக்குரல் மெய்விட்டு ஓடும் எனும் விதிப்படி
                      வெற் + இலை
தன் ஒற்று இரட்டல் எனும் விதிப்படி
                   வெற்ற் + இலை
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் எனும் விதிப்படி
                      வெற்றிலை
எனப்புணர்ந்தது.
6.முன் நின்ற மெய் திரிதல்
 முன் உள்ள மெய் எழுத்து திரிதல்,
                    செந்தமிழ்
                 செம்மை + தமிழ்
ஈறுபோதல் எனும் விதிப்படி மை போகும்,
                   செம் + தமிழ்
முன் நின்ற மெய் திரிதல் எனும் விதிப்படி 
                    செந்தமிழ் ( ம் ந்) 

எனப்புணர்ந்தது.
7.இனமிகல்
 இன எழுத்து தோன்றுதல்,
                            பூங்கொடி
                            பூ+ கொடி
 பூப் பெயர் முன் இனமென்மையும் தோன்றும் எனும் விதிப்படி
                             பூங்கொடி 
எனப்புணர்ந்தது,

சரி

 அந்த இனையவும் என்னாச்சு என்று தானே, அது தான் இனையவும்,  விதிகளை இனைக்க,

இது பற்றி,

அதாவது பண்புத்தொகையில் இரு வேறு கருத்துக்கள் இருக்கிறது,

 இனையவும் என்ற விதப்புக் கிளவி வேண்டியன விளைவிக்கும்,

இதற்கு இன்னும் வேறு பெயர்களும் உண்டு,
 
அடுத்து,

நான் இவ்வளவு நேரம் சொன்னேன் இல்லையா?

அதைப் பொறுமையா கேட்ட உங்களுக்கு இது,

                  பைந்தமிழ்

இதனை எவ்வாறு பிரித்து எழுதி விதி செய்வீர்? 

                                            தொடரும்,,,,,,,,,,,,,
                       
                    மலர்கள் க்கான பட முடிவு


Wednesday, 15 July 2015

நானும் என் ஒற்றைச்,,,,,,,,,,,,,,

                                                   
           நானும் என் ஒற்றைச்,,,,,,,,,,,,,,        
                                                    
                                          வண்ணத்துப்பூச்சி க்கான பட முடிவு


                  படம் கூகுள் நன்றி


இலையுதிர்ந்த மரங்களின் மீதும்

என் மனப்பட்சியின் மீதும்

மலரிதழ்கள் தூகிறது வானம்.

பாழ்பட்ட வீட்டின் 

பிளவுகளுக்குள் நானும்

என் ஒற்றைச் செடியும்,,,,,,,,

ஊன்றிப் பார்த்தால்

அதன் இலைத்தாண்டி

சிறு மொட்டு,

மலரும் நாள் நோக்கிய 

என் அசைவற்ற முகத்தில்

வந்து அமர்ந்தது ஓர் 

வண்ணத்துப்பூச்சி.

கூடிழைக்கப் புல்லிதழ் 

பொறுக்கும் 

சிறுகுருவியைப் போல்

வருவதும் போவதுமாய்

பட்டென்று 

வெடித்து மலர்ந்த 

மலர் மேல்

தன் மூக்கு நுழைத்து

பூ நெய் அருந்தி

மகிழ்ந்து

மகிழ்வூடிய மறுகணமே

சடுதியில் விலகிடும்

சூக்குமம் எனக்குப் பிடிபடவேயில்லை

சிறிதொரு கவிதையாவது

முடைந்திடும் முயற்சியில்

தோற்றேன் பல பொழுது

வண்ணத்துப்பூச்சிடமும் தான்

Monday, 13 July 2015

மன்னிப்பு


மன்னிப்பு
                                       இதயம் போட்டோ க்கான பட முடிவு

    சில நாட்களுக்கு முன் என் வகுப்பு மாணவர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த நூலைப் பார்த்து, அந்த நூலைப் படிக்கனும் எனும் ஆவலில் அதைக் கொடுங்கள் படித்து தருகிறேன் என்றேன். எந்த நூலைப்பார்த்தாலும் படிக்கும் ஆவர்வம் உண்டு. படித்ததில் பிடித்த பகுதி இது, உங்களுக்காக,

   ஓர் ஊரிலே பெரியவர் ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவருக்கும் அவர் பங்குத்தந்தைக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டது. அது முதல் அவர் கோவிலுக்கு போவதில்லை. பங்குத் தந்தையையும் பார்ப்பதில்லை. ஆண்டுகள் உருண்டோடின. அந்தப் பெரியவர் நோய்வாய்ப்பட்டார். படுத்த படுக்கையானார். அந்த ஊர் உபதேசியார் அந்தப் பரியவரைப் பார்த்து, ஐயா, நம் பங்குச் சாமியாரை அழைத்து வருகிறேன். ஒரு நல்ல பாவசங்கீர்தனம் செய்யுங்கள். நம் பங்குத்தங்தையோடு சமாதானம் ஆகுங்கள், என்று சொல்லிப்பார்த்தார். ஆனால்அந்தப்பெரியவர் முடியாது என்று சொல்லி விட்டார்.


     அந்தப் பெரியவர் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. மரணத்தை நெருங்க்கொண்டிருங்தார். மீண்டும் உபதேசியார் அவரைச் சந்தித்து இப்போதாவது சாமியாரை அழைத்து வருகிறேன். என்று கேட்டார். அந்தப் பெரியவரும் சரி என்று தலையாட்டினார். உபதேசியார் மகிழ்ச்சியோட பங்குச் சாமியாரிடம் தெரிவித்தார். பங்குச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி. சின்ன சாமியாரையும் அழைத்துக் கொண்டு அந்தப் பெரியவர் வீட்டிற்கு விரைந்தார். இரண்டு சாமியார்களும் பெரியவன் இரண்டு பக்கங்களில் நின்று கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்தப் பெரியவர் கூடி இருந்த மக்களைப் பார்த்து சத்தமாக நான் இப்போதுதான் இயேசுநாதர் சுவாமியைப் போல் சாகப்போகிறேன். என் இருபக்கமும் இரண்டு கள்வர்கள் நிற்கிறார்கள் என்று சாமியார்களைச் சாடிக் கொண்டே உயிர்விட்டார்.

      மரிக்கும் போதும் கூட மன்னிக்க மனம் இல்லாத மனிதர். விலங்குகளிடமிருந்து நம்மை வேறுபடுத்துவது மன்னிப்பு. அந்த மன்னிப்பை வழங்குவதற்கு நம் உள்ளம் எவ்வளவு தயங்குகிறது?
 

                                                          இதயம் போட்டோ க்கான பட முடிவு
 

50 ஆவது பதிவு- எண்ணிக்கைக்கு,,,,,,,,,,,,,,,,,


Wednesday, 8 July 2015

ஸ்டெப்னி



ஸ்டெப்னி 

  அழகிய மாலை நேரம், சீறற்ற சாலையில் சீரான வேகத்தில் ஒரு மகிழூந்து,(நான்கு சக்கர வாகனம் கார் ) சென்றுக்கொண்டு உள்ளது, சாலையின் இருபுறமும் பசுமையான வயல்வெளி, மனதைக் கவரும் இந்த காட்சியைக் கண்டுகொண்டே காரில் பயணிக்கும் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் செல்கிறார்கள், அளவான சத்தத்தில் இசையும் உள்ளே பரவி மனதை மயக்கித் தூக்கத்திற்கு அழைக்கிறது,

திடீர் என்று மகிழுந்து சாலையில் அலைபாய்கிறது,

ஓட்டுநனர் சாமார்த்தியமாக எந்த அசம்பாவிதமும் நிகழாமல் மகிழூந்தை நிறுத்துகிறார்,
என்னவாயிற்று என்று பதறும் உறவுகளுக்குத் தைரியம் சொல்லிக் கீழே இறங்கிப் பார்க்கிறார்,
 
car puncher க்கான பட முடிவு 
சக்கரம் தன் நிலை இழந்து, அதன் உள் இருந்த காற்றெல்லாம் வற்றிச் சப்பையாக,(டயர் பஞ்சர்)

சரி சரி பரவாயில்லை,

 car stepney க்கான பட முடிவு

அதான் (ஸ்டெப்னி) மாற்றுச் சக்கரம் இருக்கே, உடனே கழற்றி மாட்ட வேண்டியது தானே,
 என்றவுடன் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தார்கள்,
ஸ்டெப்னி என்றால் என்ன?
  
  ஸ்டெப்னி என்றவுடன் சிலருக்கு வேறு ஞாபகம் வருவது இயற்கை.



சரி சரி,,,,,,,,

இது ,
டயர் பஞ்சராகும்போதும் மற்றும் சமயங்களில் வெடித்துவிடும் போதும் ஆபத்பாந்தவனாக ஸ்டெப்னி பயன்படுகிறது. மேலும், ஸ்பேர் வீலை பெரும்பாலும் ஸ்டெப்னி என்றே நம்மூரில் அழைக்கிறோம்.
சரி இது எப்ப கண்டுபிடிக்கப்பட்டது?
ஊர்திகளுக்கான மாற்றுச்சக்கரத்தை ஸ்டெப்னி (stepney) என்கிறோம். ஆனால்,இச்சொல் தெருவின் பெயராகும். இங்கிலாந்திலுள்ள ஸ்டெப்னி (stepney)தெருவில், 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் மாற்றுச்சக்கரம் ஒன்றை வால்டர் தேவீசு(Walter Davies)என்பவரும் தாம்(Tom) என்பவரும்  ஏற்பாடு செய்து தந்தனர். இத் தெருவில் கண்டறியப்பட்ட இம்முறைக்கு ஸ்டெப்னி (stepney ) என்னும் பெயர் நிலைத்து விட்டது.
  வால்டர் மற்றும் டாம் டேவிஸ் சகோதரர்கள் ஸ்டெப்னி வீலை தனியாக உரிமையாளர்களிடம் விற்பனை செய்தனர். அவர்களது ஸ்பேர் டயர் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்தான்            ஸ்டெப்னி அயன் மாங்கர்ஸ்
அது சரி நாம் நினைப்பது போல் இப்ப
இல்ல
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
அய்யோ ஆரம்பித்துவிட்டாயா?
யார் கிட்ட கதை விடற ஏதோ சில தகவல்கள் தருகிறாய் என்பதற்காக,,,,,,,,,,,,
இல்லை, உண்மை உண்மை உண்மை ,,,,,,,,,,,
ஆம் 
ஔவையார் 
சொல்கிறார்,
ஆம் 
இது சங்க காலம்,
அவரின் சங்கப்பாடல் அதனைச் சொல்கிறது
பாடல் இதோ,

எருதே இளைய நுகம்உண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவல்இழியினும் மிசைஏறினும்
அவணது அறியுநர் யார்என உமணர்

கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன 

இசைவிளங்கு கவிகை நெடியோய் திங்கள்
நாள்நிறை மதியத்து அனையைஇருள்
யாவண தோநின் நிழல்வாழ் வோர்க்கே
                                ஔவையார்
(புறநானூறு  )

வண்டியில் பூட்டப் பட்ட காளைகள் இளயவை, இதுகாறும் வண்டி நுகத்தை அறியாதவை. அவை பூட்டப்பட்ட வண்டியில் ஏற்றப்பட்ட பொருளும் மிகவும் அதிகம், அது பள்ளத்தில் இறங்கினாலும், மேட்டில் ஏறினாலும் அப்போது வரும் இடையூற்றை அறிபவர் யார் என்று எண்ணி உப்பு வணிகர் அச்சு மரத்தை அடுத்துச் சேம அச்சுக் கட்டுவர். அத்தகைய அச்சைப் போன்றவனே புகழ் விளங்கிய கொடுப்பதற்குக் கவிந்த கையை உடைய உயர்ந்தவனே நீ பதினாறு கலைகளும் ( நாள் நிறைந்த) நிரம்பப்பெற்ற முழுமதியை ஒத்தவன்.எனவே உன் நிழலில் வாழ்பவர்க்குத் துன்பமான      இருள் எங்கே உள்ளது.

    ஊர்திச் சக்கரங்களில் ஏதும் பழுது ஏற்பட்டால் பயணம் நிற்காமல் தொடருவது பற்றிச் சிந்தித்துள்ளனர் நம் தமிழ் முன்னோர்கள். அப்பொழுது உருவாக்கப்பட்டதுதான் சேம அச்சு. சக்கரம் பழுதடையும் பொழுது பயன்படுத்துவதற்காகக் கூடுதலாக வண்டியில் சேமத்திற்காக பாதுகாப்பிற்காக-இணைக்கப்படுவதே சேம அச்சு. இத்தகைய சேம அச்சு போன்று மக்களுக்கு இடர் வரும் பொழுது அதனைக் களையும் சேம அச்சாக மன்னன் விளங்குகின்றான் என இப்பாடல் அடி மூலம் ஔவைப்பிராட்டியார் விளக்குகிறார்.
மன்னரைப் பாராட்டப் பயன்படுத்திய இவ்வடி மூலம் நமக்குப் பழந்தமிழரின் அறிவியல் உண்மை ஒன்று கிடைத்துள்ளது.
நம் தமிழ் முன்னோர்கள் மாற்றுச் சக்கரங்களின் தேவை உணர்ந்து அதை உருவாக்கி உள்ளனர் என்னும் பொழுது அவர்களின் அறிவியல் அறிவு வியப்பளிப்பதாக உள்ளது.
எல்லா அறிவியலும் மேனாட்டிற்குரியனவே என்னும் அறியாமை நீங்கி நடுநிலையுடன் ஆராய்ந்தால் பன்னெடுங்காலத்திற்கு முன்பே நம் தமிழர் அறிவியல் வளத்தில் சிறந்திருந்ததை உணரலாம். 

ஸ்டெப்னி-சேம அச்சு
(பூக்கும் ,,,,,,,,,,)