அனைவருக்கும் வணக்கம்
நான் வந்துட்டேன்
இதோ உங்களுக்கான ஒரு சங்க இலக்கிய பாடல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சங்க இலக்கிய பாடல்கள் அனைத்தும் ஐந்து உரிப்பொருள்களையும்
அடிப்படையாக் கொண்டும், கருப்பொருள்களைத் அதற்கு தக்க துணைமைகளாக கொண்டும் விளங்குகின்றன.
பகலும்
இரவும் தவறாது தலைவியைக் கண்டு வந்த தலைவன் யாது காரணமோ தெரியவில்லை, சில காலமாக தலைவியைக்
காண வரவில்லை. இதனால் வருத்தம் அடைந்த தலைவி தன் தோழியிடம் புலம்புகிறாள். அன்புத்
தோழி ஆறுதல் கூறியும், அமைதி பெறாத தலைவி, மனம் நொந்து தன்
தலைவினோடு கொண்டுள்ள காதலை விளக்கமாக பேசுவதாக அமைந்த குறுந்தொகைப் பாடல் இது.
யாவதும் அறிகிலர் கழறு வோரே
தாயில் முட்டை
போலவுட் கிடந்து
சாயின் அல்லது
பிரிதெவ னுடைத்தோ
யாமைப்
பார்ப்பி னன்ன
காமம் காதலர்
கையற விடினே
(குறுந்தொகை
152)
என் அன்புத் தோழியே, என்னை
ஆற்றியிரு என்று கூறுகிறாயோ, நான் என் தலைவன் மீது கொண்டுள்ள காதல் எப்படிப்பட்டது
என்பது உனக்குத் தெரியாதா உரைக்கின்றேன் கேள். ஆமையைப் பார்த்திருக்கின்றாயல்லவா அந்த
ஆமையின் பார்ப்பு அதாவது அதனுடைய பிள்ளை, தாயின் முகம் பார்த்துத்தானே நாளும் வளரும்.
அது போலவே என் காதலன் அருட்பார்வையிலேயே தான் என் காதலும் வளர்ந்தாக வேண்டும்.
மேலும், கேள் என் தோழியே, கோழியால் அடைகாக்கப்படாத முட்டை என்னவாகும் நாளும் தனித்து கிடந்தால்
அதன் உட்கரு அழிந்து போகுந்தானே அதைப்போலவே என் காதலனின் அரவணைப்பை நான்
இழந்தேனென்றால் என் காதல் அழிய நானும் அழிந்து போவேன். என் காதல் நிலைமை இவ்வாறிருக்க
நீ என்னை பொறுத்திரு என்று கூறுவது ஏற்புடைத்தன்று என்று கூறுகின்றாள். இவளின்
கூற்றிற்கு ஆமையும் அதன் பார்ப்பும், கோழியும் அதன் முட்டையும் துணை நிற்கின்றன.
தலைவியின் நிலைப்பாட்டை விளக்கும் வரிகளைத் தருபவர் கிளிமங்கலங்கிழார் எனும்
புலவர்.