Tuesday, 30 September 2025

 

வாழ்த்துகள்

           நம் மக்கள் மேன்மை அடையும் போது நாம் அடையும்  மகிழ்ச்சி எல்லையற்றது. ஆம் மாணவர்கள் சாதிக்கும் போது அவர்களைக் காட்டிலும் நாம் ஆசிரியர்கள் மகிழ்வது இயல்பு தானே. பொருந்தொற்றிற்கு பிறகு கல்வியின் நிலை மனம் ஏற்புடையதாக இல்லை. அந்த நிலையில் சில மாணவர்கள் தம் நிலை உணர்ந்து செயல்படும் போது சாதிக்கிறார்கள்.

             எங்கள் கல்லூரியின் மாணவி மா. சக்திப்பிரியா பத்திரிக்கைத் துறையில் தன் பயணத்தைத் தொடர முயன்று, பல நேர்காணல் எதிர்நோக்கி வெற்றிபெற்றார். இன்று விகடன் மாணவ பத்திரிக்கையாளர். அவரின் முதல் கட்டுரை இல்லை தகவல் தொகுப்பு சக்திவிகடனில் வெளிவந்துள்ளது. வாழ்த்துகள் சக்தி

         இந்த வெற்றியை கல்லூரி செயலர் திரு இரா.சுந்தரவதனம் கல்லூரி முதல்வர் முனவர் இரா.இராசாமணி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி.கண்மணி  துறைப்பேராசிரியர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.

கூடுதல் சிறப்பு விகடன் குழுமத்தின் முதன்மைச் செய்திளார் தஞ்சைப்பகுதி ஆசிரியர் குணசீலன் அவர்கள் வந்து வாழ்த்தியது. நன்றி குணசீலன் ஐயா,,,








Tuesday, 23 September 2025

 

                                                     மூகவிடுதலை

           தமிழின் தொன்மை அறிந்தோர் மனதில், கரந்தைத் தமிழ்ச் சங்சம் என்றும் நிலைத்து நிற்கும் ஒரு கடல். ஆம் மொழியின் மேன்மைக்காய் தொடர்ந்து பாடுபடும் சங்கம் இது. இதன் கல்வி நிறுவனம் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியாக நிற்கும், கரந்தைப் புலவர் கல்லூரி. இக்கல்லூரி தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளை உருவாக்கியது. காலச்சூழலுக்கு ஏற்றவாறு கலைக்கல்லூரியாக தமிழ்ப் பணியாற்றி வருகின்றது. இற்றை நாளில் தமிழ்த்துறையின் தமிழ் உயராய்வுமையம் மாணவர்களுக்காய் ஊடகவியல் பயிற்சி பட்டறை 15 நாள்கள் நடத்தியது. 26 ஆளுமைகள் 28 அமர்வுகளில் அச்சு ஊடகம் முதல் காட்சி ஊடகம் வரை அனைத்தையும் மாணவர்களுக்கு விளக்கினார்கள். இப்பயிற்சியின் நிறைவாய் பயிற்சியாளர்களுக்கு சான்றிழ் வழங்கும் நிகழ்வு இன்று (23.09.2025) நடைபெற்றது. 

                  சிறப்பு விருந்தினராய் ஊடகத்துறையின் முத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் அவர்கள் வருகைப் புரிந்தார்கள். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு குறித்து முதல் நாளே தன் முகநுல் பக்கத்தில் எழுதியிருந்தார். தம் உரையில் அச்சு ஊடகம் முதல் இன்றைய காட்சி ஊடகம் வரை அனைத்தையும் மாணவர்களுக்கு கூறினார். பாரதியின் பத்திரிக்கைப் பண்பினையும் புகழ்ந்தார். கரும்பு தொழிலாளர்களின் துன்பத்தினை வடித்த கவிதையைக் குறிப்பிட்டார். திரு,வி.க, ஜிவா, பெரியார், அண்ணா, கலைஞர் என அனைவரின் ஊடகப் பணியினை மாணவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் விளக்கினார். மூவிடுதலைக்கான அடிப்படையாக அமைந்த இதழ்களை சுட்டிச்சென்றார். மிகச் சிறப்பானதொரு உரையாக அமைந்தது. எதிர்கால ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள் கூறி தம் உரையை நிறைவுசெய்தார். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். வணக்கமும் நன்றியும் தோழர்.






Monday, 22 September 2025

    அனைவருக்கும் வணக்கம் 

      இணையத்தில் இயங்குதல் என்பது இன்று  இயலாமல் போனது. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆனாலும் மீண்டும் இயங்கும் சூழலில் இணையத்திற்குள் நான். ஒரு கட்டத்தில் வலைப்பூவில் எழுதுதல் என்பது மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருந்தது.  பின்னொரு சமயத்தில் இவை அனைத்தும் மாறிப்போனது. முழு முதற் காரணம் வேறு இல்லை.சோம்பல் தான். இன்று மீண்டும் எழுதுதல் என்பது என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கக் கூடிய,  என் அடிப்படையான இயக்க வாதிகளுக்காக. ஆம் என் அருமை மாணவர்களுக்காக  மீண்டும் வலைப்பூவில் தொடர் ஓட்டத்தை எடுத்திருக்கின்றேன். 

                        வேகமான ஓட்டம் அல்ல.  மிதமான ஓட்டமே. என் மாணவர்களும் என்னோடு. என்னை முந்தக்கூடிய அவர்களின் பின்னே நான். எதைப் படித்தாலும் எதைப் பார்த்தாலும் உடனடியாக எழுதிட வேண்டும் என்று மனம் சொல்லும். ஆனாலும் ஏனோ எழுதிட துணிவதில்லை. பதிவு செய்து வைத்திட எத்தனையோ நினைவுகள் நிகழ்வுகள். முடிந்தவை முடிந்தவையாகவே இருக்கட்டும். இனிமேலும் தொடர்ந்து எழுதுவோம் என்ற நம்பிக்கையில் எழுதிட முனைந்துள்ளேன். வாசித்து வாழ்த்துதலான பின்னூட்டத்தை முன் போலவே எனக்கு அளித்திட வேண்டுகிறேன். 



Sunday, 20 April 2025

 

வாழ்க நம் தமிழ்த்தாய்! வாழ்க நம் தனிமொழி.,

        நூற்றாண்டு கண்ட நம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இற்றை நாள் ஐம்பெரு  விழாதனைத் தலைமையேற்று நடத்திட மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்களை முன்மொழியப் பட்டும் வழி மொழியப் பட்டும் ஐம்பெரு விழா இனிதே துவங்கியது . தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைத் கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி இரா. இராசாமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். நிகழ்வில் முன்னிலை வகித்த கரந்தைத் தமிழ்த் சங்கத்தின் செயலாளர் திரு இரா.சுந்தரவதனம் அவர்கள், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களையும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வணக்கத்திற்குரிய தஞ்சையின் மேயர் துணைமேயர் கழகத் தொண்டர்கள் ஆசிரிய பெருமக்கள் மாணவச் செல்வங்கள் என அனைவரையும் வரவேற்று தன் முன்னிலை உரையை நிகழ்த்தினார். அவர் தம் உரையில் மொழிக்காய் தமிழ்ச்சங்கம் பாடுப்பட்ட நிகழ்வுகளைச் சுட்டிச் சென்றார்.

 சங்கம் நிறுவிய துங்கன் திரு. த.வே. இராதாகிருட்டினன் அவர்களின் திருஉருவப்படத்தினையும், நூற்றாண்டு கண்ட தமிழ்ப்பொழில் இதழின் இலச்சினையும்(Logo), இந்தி மொழி எதிர்ப்பு குறித்த  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான காக்கை விடு தூது என்னும்  நூலினையும், வா.மு.சே முத்துராமலிங்க ஆண்டவரின் தமிழின் பெருஞ்சுவர் மற்றும் வள்ளலார் காலமும் கருத்தும் என்னும் நூலினையும் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். தம் உரையில் இது போன்றதொரு தமிழ் பெரும் கூட்டத்தினைத் தான் யாங்கனும் கண்டதில்லை என்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் ஆற்றி வரும் தமிழ்ப்பணியின் சிறப்புதனை வெகுவாக பாராட்டினார்கள்  உலகத்திலேயே உயிர்ப்போடு இயங்கக்கூடிய ஒரு தமிழ்ச் சங்கமாக கரந்தைத் தமிழ்ச் சங்கம் இருக்கின்றது என்று பாராட்டியும் வாழ்த்தியும் இச் சிறப்பு மிக்க கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு தாம் என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என்றும் தன்னுடைய உரையை நிறைவு செய்தார்கள் . திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்  திரு. துரை சந்திரசேகரன் அவர்கள் மகிழ்வான வாழ்த்துரை வழங்கினார்கள் தஞ்சை மக்களவை உறுப்பினர் திரு.ச. முரசொலி அவர்கள், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு .டி .கே .ஜி .நீலமேகம் அவர்கள், தஞ்சையின் மாநகர மேயர் திரு. சன் இராமநாதன் அவர்கள், கும்பகோணம் துணை மேயர் சுப. தமிழழகன் அவர்கள்,  தஞ்சை மாவட்ட அவைத்தலைவர் திரு   சி. இறைவன் அவர்கள், தஞ்சாவூர் துணை மேயர் திருமதி. அஞ்சுகம் பூபதி அவர்கள் தமிழ் மக்களுக்கு கரந்தத் தமிழ்ச்சங்கம் ஆற்றி வரும் சிறப்புகளை வெகுவாக பாராட்டி தம்முடைய வாழ்த்துரையை வழங்கினார்கள் .

       பேராசிரியர் முனைவர்.வா. மு. சே. ஆண்டவர் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்க புலவர் கல்லூரியின் மேனாள் மாணவர் இந்நாள் பேராசிரியர் முனைவர் இரா. கலியபெருமாள் அவர்கள், தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் கோ. தேய்வாநாயகம் அவர்கள் தமிழ்ப்பொழில் நூற்றாண்டு தொடக்க விழா சிறப்புரையும் கரந்தைத் தமிழ்ச் சங்கமும் இந்தி எதிர்ப்பும் எனும் பொருண்மையில்  உரைதனையையும் மிகச் சிறப்பாக நிகழ்த்தி அமைந்தார்கள். கரந்தைக் கலைக் கல்லூரியின் வேதியல் துறை மாணவர் வெற்றி கண்ணன் அவர்கள் இந்தி மொழி எதிர்ப்பு குறித்தும் கரந்தைத் தமிழச் சங்கத்தின் பெருமை குறித்தும் பாடல் வெகு சிறப்பாக பாடினார்.

           நிகழ்வின் இறுதியாக  கலந்து கொண்ட தமிழ் உறவுகளுக்கு  தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் உதவிப்பேராசிரியரும் தமிழ்ப்பொழில் இதழின் பொறுப்பாசிரியர் ஆகிய முனைவர் சீமகேசுவரி அவர்கள் நன்றி கூறினார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வு தனை தஞ்சை மாநகர் மன்ற உறுப்பினரும் கரந்தைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினரும் ஆகிய திரு சுந்தர. செந்தமிழ் செல்வன் அவர்கள் வெகு சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்.

தமிழ்ப்பொழில் இலச்சி(Logo),

சங்கம் நிறுவிய துங்கன் திரு. த.வே. இராதாகிருட்டினன்

காக்கை விடு தூது



Thursday, 2 January 2025

 

வாழ்த்துகள்

வசந்தங்கள் சொந்தமாகட்டும்

வாழ்க்கை முழுதும்