Friday 11 August 2023


அனைவருக்கும் வணக்கம்

நான் வந்துட்டேன்

இதோ உங்களுக்கான ஒரு சங்க இலக்கிய பாடல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

        சங்க இலக்கிய பாடல்கள் அனைத்தும் ஐந்து உரிப்பொருள்களையும் அடிப்படையாக் கொண்டும், கருப்பொருள்களைத் அதற்கு தக்க துணைமைகளாக கொண்டும் விளங்குகின்றன. பகலும் இரவும் தவறாது தலைவியைக் கண்டு வந்த தலைவன் யாது காரணமோ தெரியவில்லை, சில காலமாக தலைவியைக் காண வரவில்லை. இதனால் வருத்தம் அடைந்த தலைவி தன் தோழியிடம் புலம்புகிறாள். அன்புத் தோழி ஆறுதல் கூறியும், அமைதி பெறாத தலைவி, மனம் நொந்து தன் தலைவினோடு கொண்டுள்ள காதலை விளக்கமாக பேசுவதாக அமைந்த குறுந்தொகைப் பாடல் இது.

                                     யாவதும் அறிகிலர் கழறு வோரே

தாயில் முட்டை போலவுட் கிடந்து

சாயின் அல்லது பிரிதெவ னுடைத்தோ

யாமைப் பார்ப்பி   னன்ன

காமம் காதலர் கையற விடினே

(குறுந்தொகை 152)

 

             என் அன்புத் தோழியே, என்னை ஆற்றியிரு என்று கூறுகிறாயோ, நான் என் தலைவன் மீது கொண்டுள்ள காதல் எப்படிப்பட்டது என்பது உனக்குத் தெரியாதா உரைக்கின்றேன் கேள். ஆமையைப் பார்த்திருக்கின்றாயல்லவா அந்த ஆமையின் பார்ப்பு அதாவது அதனுடைய பிள்ளை, தாயின் முகம் பார்த்துத்தானே நாளும் வளரும். அது போலவே என் காதலன் அருட்பார்வையிலேயே தான் என் காதலும் வளர்ந்தாக வேண்டும். மேலும், கேள் என் தோழியே, கோழியால் அடைகாக்கப்படாத  முட்டை என்னவாகும் நாளும் தனித்து கிடந்தால் அதன் உட்கரு அழிந்து போகுந்தானே அதைப்போலவே என் காதலனின் அரவணைப்பை நான் இழந்தேனென்றால் என் காதல் அழிய நானும் அழிந்து போவேன். என் காதல் நிலைமை இவ்வாறிருக்க நீ என்னை பொறுத்திரு என்று கூறுவது ஏற்புடைத்தன்று என்று கூறுகின்றாள். இவளின் கூற்றிற்கு ஆமையும் அதன் பார்ப்பும், கோழியும் அதன் முட்டையும் துணை நிற்கின்றன. தலைவியின் நிலைப்பாட்டை விளக்கும் வரிகளைத் தருபவர் கிளிமங்கலங்கிழார் எனும் புலவர்.



11 comments:

  1. விளக்கவுரையுடன் பதிவை தந்தமைக்கு நன்றி சகோ

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ தொடர்கிறேன்.

      Delete
  2. பாடலும் விளக்கமும் நன்றாக இருக்கிறது.

    தொடர்ந்து எழுதுங்க பாலமகி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா ம்மா

      Delete
  3. பாடலும் பாடலுக்கான விளக்கமும் மிகவும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    நலமாக இருக்கிறீர்களா? இங்கு உங்களை கண்டதும் மகிழ்வுற்றேன். பாடலும், அதன் விளக்கமுமாக பதிவு அருமை. தொடர்ந்து பதிவுகளை தாருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மா நலமாக இருக்கிறேன்

      Delete
  5. பேராசிரியை பெருந்தகை அவர்களுக்கு,

    நீண்ட காலமாக வலைப்பதிவுப்பக்கம் வரும் வாய்ப்பும் சமயமும் கிடைக்கவில்லை எனவே தங்களின் பதிவுகளும் ஏனைய பிற பதிவர்களின் படைப்புகளையும் பார்க்கவோ வாசிக்கவோ சமயம் வாய்க்கவில்லை.

    எதேச்சையாக பழைய பதிவுகளை பார்க்க நேர்ந்தபோது, சமீபத்தில் தாங்கள் வரைந்திருந்த எழுத்தோவியம் - தங்களின் இந்த சங்கப்பாடலின் பதிவுடன் எனது பார்வையும் சிந்தையும் சங்கமமாகும் தருணம் அமைந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.

    தலைவி தன் தலைவனின் பிரிவை எளிய உதாரணங்களுடன் தன் தோழிக்கு எடுத்துரைக்கும் இந்த குறுந்தொகை பாடலை இன்றைய பதிவாக்கியவிதம் அருமை.

    தலைவனை பார்க்கமுடியவில்லை என்பதால் மீளா துயருறும் தலைவி, அடை நீங்கின் முட்டையின் உட்கரு சிதைந்துபோகும் உதாரணத்தை எடுத்துரைத்த தலைவி, தலைவனின் நிலை குறித்து சிறிதும் சிந்திக்காமல் போனதேன்?

    தினமும் அதுவும் அல்லும் பகலும் தன்னை பார்க்க வந்து தம் காதலை பகிர்ந்துகொண்டிருந்த தலைவன் திடீரென தம் வருகையை நிறுத்திபல நாட்கள்(காலங்கள்) ஆனதால் அவனுக்கு என்னானதோ ஏதானதோ எனும் சிந்தை - பதட்டம் - வருத்தம் சிறிதும் இல்லாதவளாக தன நிலைமையைம ட்டுமே பிரதானப்படுத்தி கூறுவது என்ன ஞாயம் என்று தெரியவில்லை.

    தலைவி தான் செல்லாவிட்டாலும் தன் தோழிகள் மூலம் "அவரை" பார்த்து வரச்சொல்லி அனுப்பி இருக்கலாமே.

    இத்தனை காலம் பழகிய தலைவனின் பிறப்பிடம் - இருப்பிடம் போன்றவை உயிராக நேசித்த தலைவிக்கு தெரிவிக்காமலா இருந்திருப்பான் தலைவன்.

    அல்லது அவனுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு இருக்குமோ? அல்லது பகைவர்களின் கைகளில் சிக்கி இருப்பானோ அல்லது நோயுற்று படுக்கையில் இருக்கிறானோ? அல்லது தம்மை மணமுடிக்க பெரும் செல்வம் தேவைப்படும் என எண்ணி கடல் கடந்து திரவியம் தேட சென்றிருப்பானோ என்றெல்லாம் கூட தோழியிடம் சொல்லி இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இந்த குறுந்தொகை பாடல் பெருஞ்சிறப்பு பெற்றிருக்குமோ?

    ஏதோ மனசில பட்டது அதான் பட்டுன்னு சொல்லிட்டேன்.

    இதுபோன்ற சங்க இலக்கியங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

    சிலப்பதிகாரம்,வளையாபதி, சீவக சிந்தாமணி, குண்டலகேசி போன்ற காப்பியங்களில் வரும் சிறப்பு பகுதிகளையும் சிறிது சிறிதாக விளக்கி தங்களுக்கே உரித்தான எளிய நடையில் எழுதுங்கள் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது; என்னைப்போன்று பலருக்கும் இருக்குமென நம்புகிறேன்.

    வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

    கோ.

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை எங்களின் காதல் - தொடர்பு என் வீட்டாருக்கு தெரிந்திருக்குமோ ஆதலால் என்னுடைய உறவினர்கள், சகோதரர்கள் அல்லது என் மீது ஒருதலை காதல்கொண்டு ஓரக்கண்ணால் சாடைகாட்டிவந்த என் முறைப்பையன்/ தாய் மாமன் என் தலைவனை மிரட்டி அல்லது அடித்து காயப்படுத்தி இருப்பார்களோ, அப்படி இருக்காது என் தலைவன் வீரனன்ரோ.

      ஒருவேளை இந்தப்பக்கம் உன்னை இன்னொருமுறை பார்க்கக்கூடாது என ஊர் எல்லையில் உள்ள குலதெய்வ கோவிலில் கற்பூரம் ஏத்தி சத்தியம் வாங்கி இருப்பார்களோ அதனால்தான் என் அன்பு காதலன்- சத்திய சீலன், சத்தியத்திற்கு கட்டுப்பட்டு என்னை காண வரவில்லையோ? அய்யகோ என்ன செய்வேன் அல்லது பெருந்தொகை ஈட்ட அல்லும் பகலும் ஓய்வின்றி உழைக்கின்றானோ, ....என்று கூட இந்த குறுந்தொகை சொல்லி இருக்கலாமோ?

      இந்த குறுந்தொகை பாடல் என்னை வெகுவாக சிந்திக்க வைத்துவிட்டது.

      Delete
  6. ஆகா,,, மிக்க மகிழ்ச்சி நன்றி தங்களின் ஆழமான கருத்திற்கு.

    ReplyDelete