Friday 22 May 2015

பயப்புள்ள ஒரு SMS கூட அனுப்புல

காதல் தோல்வி க்கான பட முடிவு
படம் நன்றி கூகுள்

பயப்புள்ள ஒரு SMS கூட அனுப்புல

             ஒரு செய்தி கூட இல்லை.வருகிறேன் என்றாய், கடவுள் மேல் சத்தியம் என்றாய், என் வாக்கு பொய்யில்லை என்றாய் இன்னும் காணவில்லை உன்னை. 

    தேம்பி தேம்பி அழும்,இடிந்து போன என் இதயத்தின் குமுறலை
விவரித்துச்சொல்ல முடியவில்லை,உன்னை மறக்க முடியவில்லை. நான் என்ன செய்ய, கடவுளே,

அய்யோ, சத்தியம் செய்தானே அவனைக் கடவுள் தண்டிக்குமோ, நான் என்ன செய்வேன், அவன் மேல் எந்தத் தவறும் இல்லையே, கடவுளே அவனை எதுவும் செய்து விடாதே,

ஆஹா ஹா ஹா ,,,,,,,,,, நான் ஒன்னும் இப்படியெல்லாம் புலம்பல, சங்கஇலக்கியத்தின் தலைவி,,,,,,,,,,,,,,,,
             காதலன் பிரிந்த துயரத்தால் வாடிப் புலம்பிய பெண்களைதான் இதுவரை நிறையப் பார்த்திருக்கிறோம், அந்தத் துன்பத்துக்கு நடுவிலும், அவன்மீது கொண்ட அக்கறையினால் தெய்வத்திடம் வாதாடும் இந்தக் காதலி, வித்தியாசமானவள்தான்

பார்ப்போம் வாருங்கள், 

மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇப் பசந்தன்று, நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே

எனும் கபிலர் பாடிய குறுந்தொகைப் பாடல்.

   குறிஞ்சித் திணையில் உள்ள  காதலியைப் பிரிந்து சென்றான் அவள் காதலன், அப்போது கடவுள் மேல் ஆணையாக இந்தத் தேதிக்குள் திரும்பி வருவேன்என்று சத்தியம் செய்தான், ஆனால் அந்தத் தேதியில் வரவில்லை, இப்போது, காதலிக்கு இரண்டு பிரச்னைகள், ஒன்று, அவனைப் பிரிந்த துயரம், இன்னொன்று, சத்தியத்தை மீறிய அவனைக் கடவுள் தண்டிக்குமோ என்கிற கவலை. அவனுக்காகக் கடவுளிடம் பேசுகிறாள்

இந்த மன்றத்தின் மரங்களில் குடிகொண்டிருக்கும் முதிர்ந்த தெய்வங்களே, உங்களை வணங்குகிறேன், சொன்ன சொல் தவறுகிற கொடியவர்களை நீங்கள் தண்டித்துவிடுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி உங்களிடம் பேச வந்தேன்.

என் காதலன் கொடியவன் அல்லன். என்னிடம் அவன் திரும்பி வருவதாகச் சத்தியம் செய்தது உண்மைதான். உரிய காலத்தில் திரும்பாததும் உண்மைதான்.

       அவனால் என்னுடைய நெற்றியில் பசலை படர்ந்தது, தோளெல்லாம் நெகிழ்ந்துவிட்டது என்று ஊர் பேசுகிறது. இது உண்மை அல்ல, பொய்.

        என்னுடைய மனத்தில் அவன்மீது காதல் தோன்றியது. அது பெருகிய வேகத்தால்தான் என் நெற்றிமீது பசலை படர்ந்தது, தோள்கள் நெகிழ்ந்தன, இதற்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, எனக்காகக் கோபப்பட்டு அவனைத் தண்டித்துவிடாதீர்கள்.
என்று தன் காதலனுக்காகக் கரைகிறாள்.

எத்தகைய அன்பு பாருங்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள். உங்கள் கருத்துக்கள் வேண்டி,


39 comments:

 1. இலக்கியத்தில் ஊடுருவி
  ஆங்கொரு பாடலைக் கொணர்ந்து
  கடவுளே கருணை காட்டும்
  என்னவன் அப்படியானவன் அல்லன்
  "சொன்னவள் அன்பான காதலி"
  என்று
  இலக்கியச் சுவை சொட்டும்
  இனிய பதிவை தந்தீர்கள்!
  தொடருங்கள்.

  தாங்களோ தமிழ்ப் பேராசிரியர்
  என்றாலும்
  நானோ சின்னப் பொடியன்
  என்னாலும்
  ஒரு விண்ணப்பம்
  தர அனுமதி தருவீர்கள் என
  நம்பியே தருகின்றேன்!
  பயப்புள்ள ஒரு SMS கூட அனுப்புல
  என்பதை
  பயப்புள்ள ஒரு குறும் செய்தி (SMS) கூட அனுப்புல
  என்று எழுதியிருக்கலாமே என்பதே
  என் விண்ணப்பம்!
  பிறமொழிகளை அடைப்புக்குள் அடைத்து
  தமிழ் மொழியை முதன்மைப்படுத்தவே
  என் விண்ணப்பத்தை முன்வைத்தேன்!

  ReplyDelete
 2. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் முதலில் என் நன்றிகள்.
  தாங்கள் விண்ணப்பம் என்றெல்லாம் கருத வேண்டாம் மாற்றுங்கள் என்றாலே நான் உடன்படுவேன்.
  எழுதும் போதே உணர்ந்ததேன். இருந்தாலும் என்று விட்டுவிட்டேன். இனி ஒரு போதும் இது போன்ற அலட்சிய செயல் என்னிடம் நடைபெறாது.பிறமொழிகளை அடைப்புக்குள் அடைத்து வைப்பேன்.தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

  ReplyDelete
 3. இலக்கிய காதல்...இப்படித்தான் இருக்கும்....நிகழ்கால காதேலோ வேறு மாதிரியாக இருக்கும். ஒன்று கௌவரக் கொலையாக இருக்கும் மற்றது செல்வாக்குள்ள காதலாக இருக்கும்....

  ReplyDelete
  Replies
  1. அவைக் காதல் அல்லவே வலிப்போக்கரே, காதல் இப்படித் தான் இருக்கும் மனம் விரும்பியவன் ள் வேதனைப்படக்கூடாது என்று, அதனால் தான் ஏமாற்றும்(மட்டும். மீதிப்பேர் சண்டைக்கு வரக்கூடாது) ஆண் பெண் சமுதாயம் வளர்கிறது.

   Delete
 4. அருமை முனைவரே அழகான விளக்கவுரை தொடக்கத்தில் கவிதை ஏன் ? கட்டுரை போல வருகிறது என்று குழம்பி விட்டேன் தொடருங்கள் இவ்வகை பதிவுகளை நன்றி.

  எனது ''அறிவுக்கண்'' பதிவுக்கு மீள் வருகை தந்து ''பெயரில்லா’’ கருத்துரையை காண அழைக்கின்றேன் காரணம் ஒரு ‘’போர்’’ முற்றுப்பெற்று விட்டது தாங்களும் அதைக்காண வேண்டுமென்று நினைக்கின்றேன் காரணம் உண்டு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ,
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அதனை கவிதை நடையில் எழுதினேன். பின் தயக்கத்தில் மாற்றினேன். அது கட்டுரைப் போலாகிவிட்டது. தொடர்கிறேன் இனி சரியாக, சின்னப்புள்ளப்பா, இப்ப தான் வலைதளம் வந்துள்ளேன். இப்படி பயமுறுத்தினா?
   திருப்பி பயமுறுத்துவேன். எப்புடி?

   Delete
 5. மேலே காட்டியுள்ள படத்தேர்வும் அதில் உள்ள வாசகமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது.

  //எத்தகைய அன்பு பாருங்கள்.//

  ஆறாகப்பெருக்கெடுத்து ஓடிடும் அன்புதான். :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றிகள்
   //ஆறாகப்பெருக்கெடுத்து ஓடிடும் அன்புதான். :)//
   உண்மைதான். நன்றி.

   Delete
 6. சகோ நான் சொன்னது கடைசி கருத்துரை முற்றுப்பெற்றது டெராபைட் தாமஸ் என்பவரது.... அவர் பொதுவாக அனைத்து பதிவர்களையும் கேள்வி கேட்டார் ஆகவே பதில் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. சகோ, நான் கடைசி பதில் வரை இப்ப படித்து விட்டேன். தங்களுக்கு நன்றி.

   Delete
 7. குறும் படத்தில் தொடங்கி
  குறுந்தொகை வரை !
  ஆஹா! அருமை சகோ!
  இதுபோன்ற உமது பதிவுகளுக்கு நான் வராமல் போய் விட்டால்
  அதுவும் தெய்வக் குத்தம் ஆகி விடும்!

  தெய்வமே முந்தைய பதிவுகளுக்கு வராத குற்றத்திற்காக என்னை தண்டித்து விடு!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் வரவில்லை. காரணம் தெரியாது. ஏதூம் பணி என நினைத்தேன். நன்றிகள் பல தங்கள் வருகைக்கு.

   Delete
 8. ஏதோ இலக்கியப்பதிவு போல அவ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. பின்ன என்ன நினைத்தீர்கள். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

   Delete
 9. பேராசிரியர்க்கு வணக்கம்.

  தமிழில் என்ன இருக்கிறது....?

  தமிழால் என்ன முடியும்...?


  என்று கேள்வி கேட்க நம்மிடையே ஒரு அறிவார்ந்த கூட்டம் இருக்கிறது.

  தமிழே உலகின் முதன் மொழி...!

  அதில் இல்லாததெதுவும் உலக மொழிகளில் யாண்டும் இல்லை.

  அதுவே உலக மொழிகளின் தாய் என்று மொழிப்பற்று மிக்க ஆதாரமற்று உணர்வுக் குரலுயர்த்தும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது.

  எது பற்றியும் கவலைகொள்ளாமல், ‘தம்பெண்டு தம்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தாமுண் டென்போராய் ’ இன்னொரு கூட்டமும் நம்மிடையே உண்டு.

  தமிழ் படித்தவர்கள், தமிழ் பிடித்தவர்களுடைய பணி, தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடுஞ் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவ ளென்றுண ராத இயல்பினளாம் எங்கள் தாய் என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அதன் இனிமையை, சுவையை, நம் மொழியில் என்ன இருக்கிறது என்பதை, இதுபோன்ற எளிய சொல்லாட்சி, இனிய நடை, கவரும் தலைப்புகள் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே பதிவுலகில் பெரிய அனுபவம் என்று ஒன்று இல்லாதபோதும் நான் அறிந்து கொண்டது.

  அதிலும் உங்களைப் போன்ற முறையாகத் தமிழ் படித்தவர்கள் இதில் ஆற்ற வேண்டிய பங்கு அதிகம்.

  தாம் அவரால் நோவும் போதும் தமக்குரியார் நோதலாற்றாததுதான் அன்பு.
  காதலில் இத்தலைவி அதையே காட்டுகிறாள்.
  இன்னும் அந்நோவு அவனுக்கு வேண்டாம்.. எனக்கே தருக என்னும் அன்பும் உண்டு.

  காதல் என்னும் உணர்வு, எவ்வளவு தூரம் அவளைத் துண்டாடுகிறது என்பதற்கு,

  தன் வேதனையிலும் அவனுக்கென இறையிடம் குரலுயர்த்தும் இத் தலைவியின் அன்பே சாட்சி....!

  இது போன்ற பதிவுகள் தொடரட்டும்.

  தங்களின் பணி வாழிய.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 10. வாருங்கள் என் ஆசானே,
  தங்கள் வருகைக்கு நன்றி. வாழ்த்துக்கும். இங்கு நான் ஒன்றை வெளிப்படத்தியே ஆகனும்.
  என் பிழை நீக்கியது தாங்கள். தங்களுக்கு மீண்டும் நன்றி.
  தாங்கள் இதைச் சொல்வீர்கள் என்றே விட்டுச் சென்றேன்.தேவையில்லை எனத் தாங்கள் நினைத்தீர்கள் போம்.
  தலைவி கடவுளிடம் வேண்டும் இடங்களைப் பாருங்கள்.
  ஓசை நீண்டு ஒலிக்கும்.
  அதனை நாம் உச்சரிக்கும் போது............
  ‘மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள் கொடியோர்த் தெரூஉம்’.
  இந்த வரியை இன்னொருமுறை படித்துப் பாருங்கள், அவளுடைய குரல் பயத்தில் நடுங்குவதுபோல் கேட்கிறதல்லவா?
  காதல் என்னும் உணர்வு, எவ்வளவு தூரம் அவளைத் துண்டாடுகிறது என்பதற்கு,
  தன் வேதனையிலும் அவனுக்கென இறையிடம் குரலுயர்த்தும் இத் தலைவியின் அன்பே சாட்சி....!
  ஆம் தங்கள் கருத்துக்கு மீண்டும் நன்றி கூறி தவறும் இடம் திருத்தி செம்மையாக்க அன்புடன் வேண்டுகிறேன்.  ReplyDelete
 11. இப்பதிவுக்கு மெருகூட்டுவன தலைப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படமும். பதிவை ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

   Delete
 12. வணக்கம்

  சங்க இலக்கிய பாடலை சொல்லி அதற்கான கருத்துரையை மிகவும் தெளிவாக சுவைபட சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி. படிக்க படிக்க படிக்கத்தான் சொல்லுது. பகிர்வுக்கு நன்றி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க வணக்கம்.நான் இந்த பதிவினை முன்பே படித்துவிட்டேன். தங்கள் உளம் அப்படி. நன்றிகள் சார்.

   Delete
 13. Replies
  1. வாங்கம்மா வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி.

   Delete
 14. தமிழ் இலக்கியத்தில் என்ன இல்லை
  இலக்கியக் காதலின் ஒவ்வொரு வரியையும
  ஒவ்வொரு எழுத்தையும் வாசித்து மகிழ்ந்தேன்
  சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ,
   வணக்கம்.
   ஆம். தங்கள் வார்த்தைகள் உண்மையே,
   தங்கள் வாசிப்புக்கு நன்றி.

   Delete
 15. இதுவல்லவோ காதல்...

  ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள். தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

   Delete
 16. தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும்.
  ம்..ம் காதல் ரொம்ப சக்தி வாய்ந்தது தான் ஆனாலும் இத் தலைவியின் காதல் விசித்திரமாகவே உள்ளது. தலைவன் தாமதத்தை கண்டு பொருமாமல் இப்படிப் புலம்புகிறாளே தண்டனையையும் தானே ஏற்க வேண்டி. இது வல்லவோ காதல். எளிமையாக விளக்கியமை கண்டு மகிழ்ந்தேன்.
  எனினும் கடினமான சொற்களுக்கு பொருள் கூறின் நன்றென்று தோன்றிற்று தோழி!
  அருமையான பதிவும்மா. வாழ்த்துக்கள் ...! தொடருங்கள் தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அம்மா, வணக்கம்.
   அவசியம் பொருளுரையும் இனி வழங்க முயற்சிக்கிறேன். தாங்கள் வந்து படித்து கருத்திடுவதே பெரிது. மன்னிப்பெல்லாம் என்ன? வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.

   Delete
 17. இதயத்தின் ஆழம் இப்படித்தான் இருக்கும் போலும்!..

  கபிலரின் குறுந்தொகைப் பாடலை விட -
  பதிவின் தொடக்க வரிகள் கூர்மையாக இருக்கின்றன!..

  இப்படியெல்லாம் ஒரு அன்பின் நெஞ்சம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
 18. வாருங்கள் அய்யா,
  பணி அதிகம் போலும்.
  உண்மைதான்.
  நேசிப்பதும், அதனின் நேசிக்கப்படுவதும்.
  தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 19. ஊமைக்கனவுகள் விஜூ அய்யாவுடன் நானும் ஒத்துப் போகிறேன். தமிழில் என்ன இல்லை? ஆங்கிலத்தை தேவைக்காக படிக்கலாம். ஆனால், அதை உயர்த்தி பேசுவது அடிமைத்தனத்தின் வெளிபாடுதான். அருமையான காதல் பதிவு!

  ReplyDelete
 20. வாருங்கள் SPS Sir. சென்ற பதிவு என்றீர்கள். பிற மொழி அறிவு என்பது நம்மொழியைப் பிறருக்கு சொல்ல தான் என்பது என் நிலை. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 21. வாருங்கள் SPS Sir. சென்ற பதிவு என்றீர்கள். பிற மொழி அறிவு என்பது நம்மொழியைப் பிறருக்கு சொல்ல தான் என்பது என் நிலை. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

  ReplyDelete


 22. ஓங்கும் வலிகொண்டா ளோர்மடந்தை நெஞ்சத்துள்
  ஈங்குன் பதிவானாள் ! என்சொல்ல - பூங்கரவம்
  தாங்கித் துயர்களையுந் தூயவன் தாள்தொட்டே
  ஆங்குன் குறையெல்லாம் ஆர்த்து !

  அடடா நல்லா இருக்கே இந்தக் கவலையும் தலைப்பை பார்த்து என்னமோ நினைத்தேன் ஆனால் பதிவைப் படித்து ஆடிப்போயிட்டேன்
  என் வலையில் தொடர்வதற்கும் நன்றிகள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
 23. வாருங்கள் கவிஞரே, தங்கள் வரவு நல்லதே, பூங்கரவம் அருமை அய்யா, தங்கள் வரவுக்கு நன்றிகள் பல, தொடருங்கள், தொடர்கிறேன்.

  ReplyDelete
 24. அருமையான சுவையான தூய்மையான காதலையும், அன்பையும் வெளிப்படுத்தும் பாடலும் அதன் விளக்கமும் அருமையான் ஒரு பதிவாக!!

  சங்க இலக்கியத்தில் மட்டுமல்ல சகோதரி....இது போன்ற ஒரு தலைவி இப்போதும், இந்த காலகட்டத்திலும் வாழ்கின்றார்........நாங்கள் அறிந்த ஒருவர்.......

  ReplyDelete
  Replies
  1. அப்படியா மிக்க மகிழ்ச்சி அய்யா, தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

   Delete
 25. தமிழ் இலக்கியத்தில் என்ன பலவித சுவைகள் இல்லையா சகோதரி...தங்கள் மூலமும், விஜு ஆசானின் மூலமும் பல சுவைகளை அறிகின்றோம். என்னதான் பள்ளியிலும், கல்லூரியிலும் படித்திருந்தாலும், அது மற்ற பாடங்களுடன் ஒன்றாகத்தானே படித்தோம்...பரீட்சைக்காக,...அதை முதன்மையான பாடமாக எடுத்ததில்லை ஆனதால்....பல சுவைகளை இழந்தாலும் இப்போது தங்கள் இருவரின் உபயத்தால் சுவைக்கின்றோம்....மிக்க நன்றி !

  ReplyDelete
  Replies
  1. அய்யா மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் மீள் வருகைக் கண்டு, நானும் இப்போ தான் இன்னும் ஊன்றி படிக்கிறேன். நன்றிய்யா, தங்களைப் போன்றோரின் வருகை என்னை வளப்படுத்தும் நன்றி.

   Delete