Friday 13 November 2015

வசந்தகால வாழ்க்கையாக்கிய பாடல்

               வசந்தகால வாழ்க்கையாக்கிய  பாடல்                    
                  இயற்கை காட்சிகள் படங்கள் க்கான பட முடிவுபுகைப்படம் நன்றி கூகுல்
பெண்களின் நட்பு இதன் தொடர்ச்சி
   நாம் இருப்பது அவருக்குத் தெரிந்து போச்சே என்று நினைத்து அவரைப் பார்க்க, அவரும் என்னைப் பார்க்க,,,, எது அந்தச் சங்க இலக்கியப் பாடல், எங்களை நட்பாக்க வைத்த பாடல், உறவுகளுக்குள் உறவாட வைத்தப் பாடல், வசந்தகால வாழ்க்கையாக்கிய பாடல் நாளை சொல்கிறேன்.
என்றேன் அல்லவா, இதாங்க,
  அவர் பேச ஆரம்பித்தவுடன் வார்த்தைகள் சும்மா அருவிபோல் கொட்டியது,,,,, கொட்டிய நீர் அதன் வழியே தங்குத் தடையில்லாமல் செல்லுமே அப்படி,
  தன் கைகளைக் காற்றில் வீசினார், என்னவோ வானத்தை அளந்தது போல் இருந்தது,விண்ணை முட்டும் வியன் மலையையும், உயர்ந்து நிற்கும் மலைமுகட்டையும், அதனை உரசும் நீலவானத்தையும், கோல வெண்மதியையும் கண்டு நெஞ்சு பறிகொடுக்காதார் யார்??
  உள்ளத்தைத் தம்வயமாக்கி உலகையே மறக்கச் செய்யும் மட்டிலா ஆற்றல் படைத்தவை,,,,,

    அழகிய, உயரமான, கண்கவரும் பச்சைப் பட்டாடை உடுத்தி மலையரசி மோகனப் புன்னகைப் புரியும் அவ்வுயர்ந்த மலையில், சுவைமிகு பழங்கள், காய்கள் நம்மைப் பார்த்து கண்சிமிட்டிய படியே, என்னை எடுத்துக்கோ என்று கொஞ்சுகின்றன. நன்கு பழத்த வாழை, பலா பழங்கள் பறிப்பார் இல்லாமல் கனிந்து கீழே விழுகின்றன. விழும் இவைகள் நேராக கீழே விழுமா? அவைகள் பக்கத்தில் இருக்கும் பாறையில் பட்டு சிதறி தெறிக்கின்றன. பாறைகளின் இடுக்குகளில் தேன்  கூடுகள் அதிகம் உள்ளன. அவற்றில் பட்டு சிதறியதால் தேனும் கீழே சொட்டுகிறது. அப்படி கீழே விழும் இடத்தில் ஓர் குளம், அதில் மிக குறைவாகத் தான் நீர் உள்ளது. விழுந்த பழங்கள், தேன் இவைகள் நன்கு கலந்து நாள்பட்டுப் போனதால் ஒரு விதமான புளிப்பு சுவை ஏறி ( என்னங்க,,,,, ம்ம் அதான்) வேறு சுவையில் நிறைந்து காணப்படுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் ஆண் குரங்கு ஒன்று தன் வயிறு முட்ட காய்கள், கனிகள் என தின்று விட்டு, தாகம் அதிகமானதால் அங்கு அருகில் காணப்பட்ட நீர் உள்ள குளத்தில், நீர் என்று நினைத்து அங்குள்ள பழங்கள் கலந்த கலவையை நன்றாக குடித்துவிட்டது. ( ஆமாங்க, பின்ன  அதனால் எப்படி நடக்க முடியும்) பக்கத்தில் உள்ள மிளகுக் கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏற முடியாமல் அங்குள்ள மரங்களில் இருந்து உதிர்ந்த மலர்கள் நல்ல மெத்தென்ற படுக்கைப்போல் இருக்கு. தடுமாறி விழுந்த கடுவன் அந்த பூக்களால் ஆன படுக்கையில் மகிழ்ந்து உறங்குகிறது. இத்தகைய எதிர்பாராத மகிழ்ச்சியைத் தரும் அழகிய மலைநாடு,
 வார்த்தைகளையே வனமாக்கி வளம் சேர்க்கும் இயற்கை அழகைப் பாருங்கள்,, 
   அகப்பொருளை கவினுற உணர்த்தும் பான்மையால் நூலே அகம் என்ற பெயரைத் தாங்கி நிற்கும் அகநானூறு எனும் சங்க இலக்கிய நூலில் முதல் தொகுப்பான களிற்றியானை நிரை எனும் பகுதியில் கபிலர் படைத்தளித்துள்ள இரண்டாம் பாடலே இதுதாங்க, 
ம்ம் இதோ அப்பாடல்
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையோடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட
தேறல்              / கள்
ஊழுறு               / முறைமைப்பட்ட
உண்ணுநர்த் தடுத்த  / தன்னை உண்டவர் வேறொன்றை உண்ணாவகை
குறியா இன்பம்       / சிந்தனையும் முயற்சியும் இன்றி வந்த இன்பம்.
கடுவன்             / ஆண்குரங்கு
அறியாது உண்டல்   / நீர் வேட்கையால் இதனைக் கள் என்று அறியாது 
                       உண்ணுதல்.
எப்படி இருக்கு நம் சங்க இலக்கியம் காட்டும் இயற்கை அழகு,,

                இயற்கை காட்சிகள் படங்கள் க்கான பட முடிவுபுகைப்படம் நன்றி கூகுல்
               



வேறு ஒரு பதிவில் வேறு ஒரு பாடலுடன்,,,,,,



50 comments:

  1. அழகிற்கு அழகு சேர்க்கிறது விளக்கம்... அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி டிடி சார்.

      Delete
  2. வணக்கம் பேராசிரியரே !

    பாடலை அழகாக விளக்கி இருக்கீங்க வாழ்த்துக்கள் !
    ஆமா உங்கள் நட்பை இணைத்த பாடல் இதுதானே ????

    இயற்கையின் அழகை என்னமா வர்ணித்து இருக்கிறார் புலவர்
    மிக அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சீராளரே,
      ஆம் கற்பனைக்கெட்டா வர்ணனைகள் தான்,,
      தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பாவலரே,

      Delete
  3. பதிவுகளில் மீண்டும் - வசந்த மலர்கள் பூக்கட்டும்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      நலமா? நம்ம ஊர் எப்படி இருக்கு,,,
      தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் அன்பிற்கும் நன்றிகள்

      Delete

  4. ///அவர் பேச ஆரம்பித்தவுடன் வார்த்தைகள் சும்மா அருவிபோல் கொட்டியது,,,//

    அவளவு ஜொள்ளா

    ReplyDelete
    Replies
    1. அம்மா தாயே இந்த மதுரைக் காரர் ஜொள்ளு, ச்சே லொள்ளு, அய்யோ சொல்லு, அதை நீயே பார்த்துக்கோ,,,
      ஸ்ரீ நீங்க சிரிக்கிறீங்களா??
      இருங்க இருங்க என் தோழியிடம் சொல்கிறேன்.
      வருகைக்கு நன்றிகள் இருவருக்கும்.

      Delete
  5. //சுவைமிகு பழங்கள், காய்கள் நம்மைப் பார்த்து கண்சிமிட்டிய படியே, என்னை எடுத்துக்கோ என்று கொஞ்சுகின்றன.//

    காசு கொடுக்காமல் எடுத்து கொண்டால் தோட்டக்காரன் நம்மை கட்டி வைத்து அடித்துவிடுவான், அதனால இதை படிக்கும் மக்களே இந்த வர்ணனையை படித்து ரசித்து மகிழுங்கள் ஆனால் அதை செயல்படுத்திவிடாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்றைய இயற்கை வளத்தில் இந்த தோட்டக்காரன், கட்டிவைத்து அடித்தல் இவையெல்லாம் இருந்து இருக்காதே,,,,,
      இன்று தான் என்னுடையது என்ற சுயநலம்,,,,
      இருந்தாலும் தங்கள் தகவலுக்கு நன்றி.

      Delete
  6. ///ஆண் குரங்கு ஒன்று தன் வயிறு முட்ட காய்கள், கனிகள் என தின்று விட்டு, ///

    ஆமாங்க ஆண் குரங்குகள் மட்டும்தான் சாப்பிட்டன பெண் குரங்குகள் சாப்பிடவில்லை காரணம் பெண் குரங்கு எல்லாம் டயட்டில் இருக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. ஆமா, இருக்குமோ, நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு, சங்ககால புலவர் கபிலர் அப்படித்தான் சொல்லியுள்ளார். அவரிடம் கேளுங்கள்.
      வருகைக்கு நன்றி.

      Delete
    2. ஹாஹஹஹ்ஹஹ்ஹ ஐயோ வயிறு புண்ணாகிவிட்டது..

      Delete
  7. ///நீர் என்று நினைத்து அங்குள்ள பழங்கள் கலந்த கலவையை நன்றாக குடித்துவிட்டது. ( ஆமாங்க, பின்ன அதனால் எப்படி நடக்க முடியும்) //


    ஆமாங்க அந்த பழங்கள் கலந்த கலவை என்பது ஒயின் என்று அந்த குரங்குக்கு எப்படி தெரியுமுங்க? அதனாலதான் அதை குடித்த குரங்கு நடக்கமுடியவில்லை ப்ளாட் ஆகி அங்கேயே படுத்துவிட்டது. நல்ல வேளை அப்போது வாட்ஸ் அப் எல்லாம் கிடையாது இல்லையென்றால் அம்மாவின் ஆட்சியில் குரங்கு கூட குடித்துவிட்டு அப்ப்டியே ப்ளாட் ஆகிவிட்டது என்று போட்டோ எடுத்து பரப்பி இருப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. ...அம்மாவின் ஆட்சியில் குரங்கு கூட குடித்துவிட்டு அப்ப்டியே ப்ளாட் ஆகிவிட்டது என்று போட்டோ எடுத்து பரப்பி இருப்பார்கள்....
      நான் இல்லப்பா,,, நான் ஏதோ பதிவு எழுத இது என்ன அரசியல்,,,
      எனக்கு தெரியாது,,,,, எஸ்கேப்,,,,,
      நன்றிகள் தங்கள் வீருகைக்கு.

      Delete
    2. அஹஹஹஹ்ஹ் தமிழா உங்கள் லொள்ளுக்கு அளவே இல்லாமல் போனது ரொம்ப ரொம்ப ரசிட்த்தோம் சிரித்து முடியலை....

      Delete
  8. //எப்படி இருக்கு நம் சங்க இலக்கியம் காட்டும் இயற்கை அழகு,,//


    சங்க இலக்கியத்தை இங்கு பதிவாக்கி அந்த இயற்கையை மீண்டும் ரசிக்க தந்த உங்களுக்கு பாராட்டுக்கள். பள்ளி சென்ற சமயத்தில் படித்து ரசித்து மறந்து போனதை மீண்டும் ரசிக்க செய்து வீட்டீர்கள்.... குட்...

    ReplyDelete
    Replies
    1. இந்த குட் க்கு இவ்வளவு பில்டப் தேவையா???
      சும்மா சொன்னேன்.
      தாங்கள் தந்த கமன்ட் அனைத்தும் அருமை, வருகைக்கும் வாழ்த்திற்கும் தொடர்வதற்கும் நன்றிகள்.

      Delete
  9. பாடலை அழகாக விளக்கியிருக்கிறீர்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,

      Delete
  10. பேராசியருக்கு,

    நல்ல தொரு காட்சி விளக்கம்.

    இந்த காட்சியைதான் நான் பள்ளிக்கூடத்தில் நடந்த "நான் சுவைத்த ஓர் இலக்கியகாட்சி" எனும் தலைப்பு கொண்ட பேச்சுபோட்டியில் விவரித்து பரிசு பெற்றதை உங்கள் பதிவு இன்று நினைவு படுத்தி இருக்கின்றது.

    விஷயம் ஒன்றுதான் ஆனால் நான் சொல்லிய விதம் கொஞ்சம் வேறு.

    அருமையான சங்கப்பாடல்.

    வாழ்த்துக்கள் அம்மா.

    கோ

    ReplyDelete
    Replies
    1. வருக அரசே,
      தாங்களும் போட்டியில் பேசி வென்ற பாடலா இது? ஆச்சிரியம், மகிழ்ச்சி,
      தாங்கள் எப்படி சொன்னீர்கள் என்பதையும் அறியத்தாருங்களேன்.
      தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  11. இலக்கியம்
    இயற்கை
    இயம்புகிறது
    இனிமை சகோதரி
    இறையருள் இசைந்தே
    குறையின்றி வாழ்க.
    நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ,வாழ்த்திற்கும் நன்றி புதுவையாரே.

      Delete
  12. *அங்குள்ள பழங்கள் கலந்த கலவையை நன்றாக குடித்துவிட்டது. ( ஆமாங்க, பின்ன அதனால் எப்படி நடக்க முடியும்) பக்கத்தில் உள்ள மிளகுக் கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏற முடியாமல் அங்குள்ள மரங்களில் இருந்து உதிர்ந்த மலர்கள் நல்ல மெத்தென்ற படுக்கைப்போல் இருக்கு. தடுமாறி விழுந்த கடுவன் அந்த பூக்களால் ஆன படுக்கையில் மகிழ்ந்து உறங்குகிறது* காட்சியை நேரில் பார்த்தது போல அத்தனை இதமான வர்ணனை. பாடலும், அதற்கு உங்கள் விளக்கமும் அழகு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் தொடர்வதற்கும் நன்றிகள் பல

      Delete
  13. அழகிய விளக்கம். எனக்குக் குற்றாலக் குறவஞ்சிப் பாடலும் நடுவில் நினைவுக்கு வந்தது!

    ReplyDelete
    Replies
    1. குரங்கு எனும் போது குறவஞ்சி நினைவில் வருவது இயல்பே,
      வருகைக்கு நன்றி ஸ்ரீ,,

      Delete
  14. வணக்கம்
    பாடலும் விளக்கமும் தனிச் சிறப்பு... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் பல,

      Delete
  15. அழகிய விளக்கவுரை நன்று சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  16. விளக்கம் தரப்பட்டிருக்காவிட்டால் அதன் சுவையை முற்றிலும் நாங்கள் அனுபவத்திருப்போமோ என்ற ஐயம் எழுகிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  17. அருமையான விளக்கம் மகேஸ்வரி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிமா

      Delete
  18. இயற்கை வருணனை அழகு! விளக்கம் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தளீர், வருகைக்கு நன்றிகள்

      Delete
  19. சிறந்த இலக்கியக் கண்ணோட்டம்
    சிறந்த பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  20. பேராசிரியர்க்கு வணக்கம்.

    தங்களின் சங்கப்பாடலோடு நிகழ்ந்த அனுபவமொன்றைச் சித்தரித்துப் பொருள் விளக்கிச் சென்ற விதம் அருமை. மதிப்பிற்குரிய மதுரைத் தமிழன் அவர்களின் பின்னூட்டமும் இந்தப் பதிவை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது.

    பொதுவாகச் சங்க இலக்கியக்கியங்களில் சொல்லப்படும் இயற்கை சித்தரிப்புகள் உரு சார்ந்தவை அல்ல. உணர்வு சார்ந்தவை. இயற்கை மற்றும் விலங்குகளின் செயல்களைக் காட்சிப்படுத்துவதின் வாயிலாக மனதின் நுண்ணுர்வுகளை இரகசியக் குறியீடுகளாய்ப் படிப்பவர் மனதிற்குக் கடத்திப் போகும் இடங்களே அதில் பேரதிகம்.

    எனவேதான் சங்க இலக்கியங்களைப் படிப்பதற்கு நமக்குச் சற்றுப் பொறுமையும், ஆழ்வாசிப்பும் தேவைப்படுகிறது.

    சாதாரண வாசிப்பில், நாம் வாழையாயும், பலாவாயும், இவற்றின் சாறு கலந்து, ‘உண்பவர்களை வேறேதும் உண்ணாது தடுக்கும் இன்சுவைநீர்ச் சுனை’ யாயும் அதை உண்டு தன் தொழில் மயங்கிக் கிடக்கின்ற குரங்காயும், படித்துக் கடக்கின்ற செய்தி, இந்தப் பாடலில் சொல்லப்பட வேண்டிய அவசியம் என்ன? அதைச் சுட்டுவது இந்தப் பாடலின் நோக்கமல்லவே?

    இந்தப் பாடல் தோழியின் கூற்று.

    யாரும் அறியாமல் பகலிலும் இரவிலும் தன் காதலியுடன் இருக்க விரும்பி அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் காதலன் ஒருவனிடம், காதலியின் தோழி, “ நீ இனிமேல் அவளைக் காண முடியாது” என்று கூறுவது.

    “ இன்னும் நீ இங்கேயே சுற்றிக்கொண்டு இப்படிக் காதல் மயக்கத்தில் கிடப்பதை அவளுடைய தந்தையின் காவலர்கள் கண்டால் உன் நிலைமை என்னாவது…? என்பதே அவள் கூற வருவது!

    இங்கு வாழையும் பலாவும் சுனையும் கடுவனும் எதற்கு வருகின்றன?
    வாழைக் குலையின் இனிமையும், பலாவின் சுவையும் அவளிடத்திருப்பன.

    அவை நிரம்பி வழிந்து, வேறெங்கும் செல்லாமல் எதையும் உண்ணாமல் அவனைத் தடுத்தது அவளது அழகு நிறைந்த காதல் சுனை.

    இப்படி எல்லாம் ஆவோம் எனத் தெரியாமல் அவளை முதன்முதல் சந்தித்து, அதன்பின், அவள் நினைவுகளையே தீராத தாகத்துடன் குடித்துக் குடித்து முற்றித் தன்னை இழந்த போதையுடன் குரங்கெனக் கிடக்கிறான் அவன்.

    குரங்கிற்கு மரத்தின் மேல் இருப்பதுதான் பாதுகாப்பு. நிலத்தில் கிடந்து உறங்குகிறது என்றால் அதன் உயிருக்குப் பாதுகாப்பில்லை.
    ஆனால் போதை ஏறிப்போன குரங்கு தன்னையும் மறந்து தன் தொழிலையும் மறந்து சந்தன மரத்தின் அடியில் பூக்களின் படுக்கையில் மயங்கிக் கிடக்கிறது.

    தன் உயிருக்குக் கேடு என்பதை அது உணரவில்லை.

    அவனும் தன் ஊர், பேர், தொழில் எல்லாம் மறந்து அவள் மணம் கமழும் மனமரத்தின் அடியில் நினைவுப்பூக்களில் தலை சாய்த்துக் கள்ளுண்ட குரங்காகிக் கிடக்கிறான்.

    தீராப்போதையின் திகட்டாச் சுவை.

    நீங்கள் காட்டிய பாடலின் பிற்பகுதியில் தோழி இப்படித் தொடர்கிறாள்,

    “குறித்த இன்பம் நினக்கெவன் அரிய
    வெறுத்த வேஎர் வேய்புரை பணைத்தோள்
    நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்
    டிவளும் இனைய ளாயின் தந்தை
    அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
    கங்குல் வருதலும் உரியை பைம்புதல்
    வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன
    நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே.“
    -----
    இதுதான் பாடலில் தோழி சொல்ல வருவது,

    “பகலோ இரவோ இங்கு மதிமயங்கிக் கிடந்து நீ அவளைச் சந்திக்க முடியாது.
    அவளது தந்தையின் காவலர் எவர் கண்ணிலாவது பட்டுத் தொலைந்தால் நீ அவ்வளவுதான்.
    இங்கு இருப்பது உனக்குப் பாதுகாப்பில்லை.
    உன் ஊர் போ!
    (யாரும் அறியாமல் அவளைச் சந்திக்கலாம் என்னும் எண்ணம் விடு!
    ஊரறிய உன் உற்றாருடன் வந்து, அவளைப் பெற்றோரிடம் அவளைப் பெண்கேட்டு மணக்க வா)”

    தன்னை மறந்து கிடக்கும் அவனைத் தன் (மரம் ஏறும்) தொழில் மறந்த குரங்காயும், அவளது இனிமைகளால் நிரம்பிய நினைவை, ஒருமுறை அறிந்தபின் அறிவை மயக்கித் தீராத போதை தர ஊறிக்கொண்டே இருக்கின்ற காதலின் சுனையாகவும் மாற்றிக் காட்டியதில் கபிலர் கவிஞராகிறார்.

    மதிப்பிற்குரிய மதுரைத் தமிழன் அவர்கள், இவ்விடயத்தில் ஆண்கள் குரங்காக்கப்பட்டமைக்கு கோபிக்கமாட்டார் என நினைக்கிறேன்.

    அதிகம் பேசிவிட்டேனோ ?

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் பத்தியில், “ இலக்கியக்கியங்களில்“ என இருப்பதை, “இலக்கியங்களில் “ எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

      பிழைக்கு வருந்துகிறேன்.

      நன்றி.

      Delete
    2. வருங்கள் ஐயா,

      வணக்கம்,

      தங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு முதலில் என் நன்றிகள்,

      இயற்கைக் காட்சியை மட்டுமே மையப்படுத்தினேன். இதன் பின்னுள்ள பாடல் வரிகள் பற்றி பிறகு பார்க்கலாம் என்று இருந்தேன். ஆனாலும் தங்கள் அளவுக்கு என் எழுத்துக்கள் இல்லை.தங்கள் விளக்கம் அருமை.

      சங்க இலக்கியங்கள் உணர்வு சார்ந்தவையே எனும் தங்கள் விளக்கம் மிக அழகாக ஆழமாக உள்ளது.

      .........தன்னை மறந்து கிடக்கும் அவனைத் தன் (மரம் ஏறும்) தொழில் மறந்த குரங்காயும், அவளது இனிமைகளால் நிரம்பிய நினைவை, ஒருமுறை அறிந்தபின் அறிவை மயக்கித் தீராத போதை தர ஊறிக்கொண்டே இருக்கின்ற காதலின் சுனையாகவும் மாற்றிக் காட்டியதில் கபிலர் கவிஞராகிறார்.,,,,,,,,,,,,,,,,,

      தங்கள் விளக்கம் அனைவரையும் மதிமயங்கிக் கிடக்க வைக்கும்,,,,

      தங்கள் வருகைக்கும், நீண்ட கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா,,,,


      Delete
  21. ஆஹா எத்தனை அருமையான பாடல். “ஊமைக்கனவுகள்” ஐயா அவர்களின் பின்னூட்டத்துடன் சேர்த்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் சகோ,

      Delete
  22. ஆஹா! அப்படியே எங்களைச் சோலைக்குள் கொண்டு சென்றுவிட்டீர்கள்! அருமை அருமை.

    விஜு சகோவின் பதிலையும் ரசித்தோம்....கலக்குகின்றார் அவர்!......

    மதுரைசகோவின் பதிலையும் ரசித்தோம்....லொள்ளு தாங்கலப்பா..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா,

      Delete
  23. விளக்கம் தந்ததால்... குரங்காகமல் தப்பித்தேன்.... நண்பரே.. நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே,

      Delete